சென்னை:
“மதுபானங்களை பாட்டிலில் விற்க முடிகிறது.. அப்படி இருக்கும் போது ஆவின் பாலினை பாட்டிலில் விற்க முடியாதா?” என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்ததை மறுபரிசீலனை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, ஆவின் பாலை பிளாஸ்டிக்கில் விற்க முடியுமா என பதிலளிக்கக் கோரி ஆவின் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆவின் தரப்பில், “பால் விநியோகத்துக்காக பாட்டிலுக்கு மாற்றலாமா என மக்களிடம் கருத்து கேட்டிருந்தோம். அதற்கு சரியான ஆதரவு கிடைக்கவில்லை” எனக் கூறப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், “மதுவையே பாட்டிலில் விற்கும் போது, பாலை பாட்டிலில் விற்க முடியாதா? போதையில் இருப்பவர்களே பாட்டிலை கவனமாக கையாளும் போது சுயநினைவுடன் இருக்கும் மக்கள், பாட்டிலை கையாள மாட்டார்களா? எனக் கேள்வியெழுப்பினர். இதையடுத்து, மீண்டும் ஆலோசனை நடத்தி புதிய அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்தி வைத்தனர்.