மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த அரசியல் பரபரப்பை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து கொண்டு தனது ஆதரவாளர்கள் உடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் அஜித் பவார் இணைந்தார். தனக்கு துணை முதலமைச்சர் பதவியும், தன்னுடன் வந்தவர்களுக்கு அமைச்சர் பதவியும் பெற்றுக் கொண்டார். ஏற்கனவே சிவசேனா கட்சியை உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே என இரண்டாக உடைத்து பாஜக நடத்தியதாக கூறப்படும் ஆபரேஷன் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேசியவாத காங்கிரஸ்
தற்போது மற்றொரு முக்கியமான கட்சியான தேசியவாத காங்கிரஸும் பிளவை சந்தித்துள்ளது. ஆனால் அணி மாறியவர்களை கட்சியில் இருந்து நீக்கி சரத் பவார் அதிரடி காட்டினார். அஜித் பவாரை பொறுத்தவரை அணி மாறுவதும், துணை முதலமைச்சர் பதவி வாங்குவதும் முதல்முறை அல்ல. ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இவரது அடுத்த டார்கெட் என்பது முதலமைச்சர் நாற்காலி தான்.
அஜித் பவார் டீலிங்
ஏனெனில் இவரது அரசியல் வாழ்க்கையில் இது மட்டும் தான் குறையாக இருக்கிறது. எனவே முதலமைச்சர் பதவியை குறிவைத்து பாஜக உடன் டீலிங் பேசியிருக்கலாம் என்ற சந்தேகம் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது. அதேசமயம் ஏக்நாத் ஷிண்டேவை அகற்றி விட்டு அஜித் பவாருக்கு பாஜக வாய்ப்பளிக்குமா? என்ற கேள்வியும் எழுகிறது.
மக்களவை தேர்தல்
ஏனெனில் விட்டு கொடுப்பது, மக்களவை தேர்தலை கணக்கில் வைத்து தட்டி தூக்குவது என ஆபரேஷன் மூடில் இருப்பது பாஜக தான் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் தான் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி அஜித் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரித்விராஜ் சவான் கூறி பரபரப்பை பற்ற வைத்தார்.
கொளுத்தி போட்ட காங்கிரஸ்
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவாருக்கு நன்றாக தெரியும். அவரிடம் பலமுறை எடுத்துரைக்கப்பட்டு விட்டது. ஜூலை 2ஆம் தேதிக்கு முன்பு நடந்த கூட்டத்திலும் தெளிவாக கூறப்பட்டது. முதலமைச்சர் பதவி வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்னாவிஸ் மறுப்பு
வரும் நாட்களில் மாநில அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும். அதை தாண்டி வேறு எதுவும் நடைபெறாது. ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து முதலமைச்சராக நீடிப்பார். பிரித்விராஜ் சவான் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறார். கூட்டணிக்குள் சண்டை மூட்டி விடப் பார்க்கிறார். இதன்மூலம் மாநில மக்களை குழப்ப திட்டமிட்டுள்ளார்.
ஏக்நாத் ஷிண்டே தான்
இந்த விஷயத்தில் கட்சி தலைவர்கள் யாரும் முரண்பட்டு நிற்கவில்லை. ஒருமித்த நிலையில் தான் இருக்கிறோம். ஒருவேளை ஆகஸ்ட் 10ஆம் தேதி ஏதாவது நடைபெறுவதாக இருந்தால், அது அமைச்சரவை விரிவாக்கமாக தான் இருக்கும். அதையும் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தான் முடிவு செய்வார் என்று தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்தார்.