நடிகர்கள்: சந்தானம், சுரபிஇசை: அஃப்ரோஇயக்கம்: பிரேம் ஆனந்த்
சென்னை: நடிகர் சந்தானம் நம்பர் ஒன் காமெடியனாக இருந்து வந்த நிலையில், ஹீரோவாக மாறி சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை, எப்போதும் போலவே ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என நினைத்தே தொடர்ந்து காமெடி படங்களில் நடித்து வருகிறார்.
ஆனால், ஹீரோவாக சந்தானத்துக்கு சில படங்கள் மட்டுமே கைகொடுத்தன. மீண்டும் காமெடி நடிகராகவே சந்தானம் ஆகிவிடலாமே என பலரும் கோரிக்கை வைத்த நிலையில், டிடி ரிட்டர்ன்ஸ் படம் ஹீரோவாகவும் காமெடியனாகவும் சந்தானத்துக்கு செம கம்பேக் கொடுத்திருக்கிறது இந்த படம் என்று தான் சொல்ல வேண்டும்.
தில்லுக்கு துட்டு திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய நிலையில், தில்லுக்கு துட்டு 2 மினிமம் கியாரண்டி படமாக சந்தானத்துக்கு லாபத்தைக் கொடுத்தது. இந்நிலையில், தில்லுக்கு துட்டு 3ம் பாகமாக டிடி ரிட்டர்ன்ஸ் படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், அந்த படத்தின் முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்!
டிடி ரிட்டர்ன்ஸ் கதை: ஹீரோயின் சுரபியை ஒரு பிரச்சனையில் இருந்து காப்பாற்றுவதற்காக நடிகர் சந்தானத்தின் டீம் திருடும் பணம் ஒரு பேய் பங்களாவில் தெரியாத்தனமாக ஒளித்து வைக்கிறோம் என்கிற பெயரில் சிக்கிக் கொள்கிறது.

காதலிக்காக அந்த பணத்தை மீட்க அந்த பேய் பங்களாவுக்கு சுரபியுடன் செல்கிறார் சந்தானம். கஜினி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த பிரதீப் ராம் சிங் ராவத் பேயாக அந்த பங்களாவில் நடத்தும் கேம் ஷோவில் கலந்து கொள்ள சிக்கும் சந்தானம் எப்படி அங்கே இருந்து பணத்துடன் தப்பித்தாரா? இல்லையா? என்பதை 2 மணி நேரம் காமெடி ரோலர் கோஸ்டராக சொல்லியிருக்கிறது இந்த டிடி ரிட்டர்ன்ஸ் படம்.
சந்தானத்துக்கு செம கம்பேக்: ஹீரோவாகவும் காமெடியனாகவும் திரையில் காட்சிக்கு காட்சி ரசிகர்களை சிரிக்க வைத்து ஸ்கோர் செய்கிறார் சந்தானம். வெறுமனே படம் முழுவதும் சந்தானம் மட்டுமே நிறைந்திருக்காமல் மொட்டை ராஜேந்தர், முனிஷ்காந்த், லொள்ளு சபா சேது, பிபின் என பலருக்கும் ஸ்பேஸ் கொடுத்திருப்பது தான் இந்த படத்தை இந்த அளவுக்கு ரசிக்க முடிகிறது.

காஞ்சனா சீரிஸ் படங்களில் ராகவா லாரன்ஸ் காமெடி மற்றும் ஹாரரை கலந்து கொடுத்து வரும் நிலையில், தில்லுக்கு துட்டு சீரிஸ் படங்களில் பேய்களை எந்தளவுக்கு ட்ரோல் செய்ய முடியுமோ அந்தளவுக்கு ட்ரோல் செய்து சிரிப்பலையில் ஆழ்த்துகிறார் சந்தானம்.
பிளஸ்: டீசரில் பார்த்த ஊ அன்டாவா சீன் மட்டுமின்றி ஏகப்பட்ட காமெடி காட்சிகள் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி என இரண்டிலுமே ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. படத்திற்கு தேவையான காட்சிகளை மட்டுமே எடிட் செய்து 2 மணி நேரம் கொடுத்திருப்பதே பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. ரெடிங் கிங்ஸ்லி டாக்டர் படத்துக்கு பிறகு காமெடி காட்சிகளில் அவரது ஒன் லைனர்கள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. மொட்டை ராஜேந்தர் இன்னொரு ஹீரோவாகவே வலம் வருவது படத்திற்கான பலத்தை கூட்டியுள்ளது. தலன்னு சொல்லாத ஏகேன்னு சொல்லு போன்ற காமெடி இடங்களில் தியேட்டர் அதிர்கிறது. அரசியல்வாதிகளையும் அங்கங்கே வச்சு செய்திருக்கிறார் சந்தானம்.

மைனஸ்: வழக்கமாக பேய் படங்கள் என்றாலே லாஜிக் இருக்காது. அதை பார்க்கவும் கூடாது. சில இடங்களில் எப்புட்றா என கேட்கத் தோன்றுவது மைனஸ் ஆக தெரிகிறது. ஆனால், சந்தானத்தின் சரவெடி காமெடியில் அதையெல்லாம் மறக்க வைக்கிறது. ஹீரோயின் சுரபியை இன்னமும் பயன்படுத்தி இருக்கலாம். கதை நகர்வதற்காக அவர் பயன்பட்டுள்ளார், அதை தொடர்ந்து பெரிதாக அவர் ஷைன் ஆகவில்லை. தியேட்டரில் குடும்பத்துடன் ஜாலியாக சிரித்து கொண்டாட நிச்சயம் சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்கலாம்!