Indian student wandering around starving in America | அமெரிக்காவில் பட்டினியுடன் சுற்றி திரியும் இந்திய மாணவி

நியூயார்க்: ,-கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, சிகாகோ தெருக்களில் பட்டினியுடன் சுற்றித் திரியும் தெலுங்கானா மாணவியை கண்டறியும் முயற்சியில் இந்திய துாதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்தவர் சைதா லுாலு மின்ஹாஜ் சைதி.

இவர், அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகரில் உள்ள டிரைன் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்., உயர்கல்வி படிப்பதற்காக, 2021 ஆக., மாதம் அமெரிக்கா சென்றார்.

கடந்த இரண்டு மாதங்களாக, ஹைதராபாதில் உள்ள குடும்பத்தினரை அந்த மாணவி தொடர்பு கொள்ளவில்லை.

அவர் கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருடைய உடைமைகள் திருடு போனதை அடுத்து, உணவு அருந்தக்கூட வழியின்றி, சிகாகோ நகர சாலைகளில் அவர் அலைந்து திரிவதை பார்த்ததாக, ஹைதராபாதைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அந்த மாணவியின் தாயிடம் தகவல் தெரிவித்தனர்.

தெலுங்கானாவில் ஆளுங்கட்சியான பாரத் ராஷ்ட்ர சமிதியின் பிரமுகர் கலீகுர் ரஹ்மான் என்பவர், இது சம்பந்தமான விபரங்களை தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

இதைத் தொடர்ந்து, மாணவி சைதா குறித்த விபரங்களை, உள்ளூர் போலீஸ் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் வாயிலாக, சிகாகோவில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள் கண்டறிந்தனர்.

மாணவியை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, சிகாகோவில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த சமூக சேவகர் முக்காராம் என்பவர், மாணவி சைதாவை சந்தித்து உள்ளார்.

அவரை மருத்துவமனையில் சேர்த்து தற்போது சிகிச்சை அளித்து வருவதாக, பாரத் ராஷ்ட்ர சமிதி பிரமுகர் கலீகுர் ரஹ்மான் தன் சமூக வலைதளத்தில் தகவல் பகிர்ந்து உள்ளார்.

மேலும், அமெரிக்காவில் வேலை கிடைக்காமல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, மாணவி சைதாவின் மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் மன அழுத்தத்தில் இருந்து மீண்ட பிறகே இந்தியா அழைத்து வர முடியும் என்றும் கூறப்படுகிறது.

மாணவியின் தாய் அமெரிக்கா செல்ல தேவையான ஏற்பாடு களை செய்யும்படி, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, பாரத் ராஷ்ட்ர சமிதி பிரமுகர் கோரிக்கை விடுத்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.