பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவர் பிபாஷா பாசு. இந்தி, தெலுங்கு, பெங்காலி மற்றும் ஆங்கில படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் சச்சின் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
44 வயதான இவர் பாலிவுட் நடிகர் கரண் சிங் குரோவரைக் காதலித்து கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஆறு ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த பிபாஷா பாசுவுக்கு கடந்த வருடம்தான் பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தாய்மை பயணம் குறித்து சமீபத்தில் பகிர்ந்த பிபாஷா பாசு, பிறக்குப்போதே அவரது குழந்தைக்கு இதயப்பிரச்சனை இருந்தது குறித்து மனம் வருந்தி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய பிபாஷா பாசு, “ எங்கள் குழந்தைக்கு பிறக்கும்போதே இதயத்தில் இரண்டு துளைகள் இருந்தன. பிறந்து மூன்றாவது நாளில் இதனை நாங்கள் அறிந்தோம். மிகவும் கடினமான காலத்தைக் கடந்தோம். குடும்பத்தில் யாரிடமும் இதைப் பற்றி விவாதிக்கவில்லை. எனக்கும் கரணுக்கும் ஐந்து மாதங்கள் மிகவும் கடினமாக இருந்தது.
மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியபோது நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை. தானாகவே சரியாகிவிடும் என்று நம்பினோம். பிறகு பல ஆராய்ச்சிகளைச் செய்தேன். அறுவை சிகிச்சை நிபுணர்களை சந்தித்தேன், மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவர்களிடம் பேசினேன். பிறகு அறுவை சிகிச்சை செய்ய ஒத்துக்கொண்டோம்.

மூன்று மாத குழந்தையாக இருக்கும்போது அவளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆறு மணி நேரம் அந்த அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது என் மகள் நலமாக இருக்கிறாள். எந்த ஒரு தாய்- தந்தைக்கும் இதுபோன்ற ஒரு நிலைமை வரக்கூடாது” என்று மனம் வருந்தி தெரிவித்திருக்கிறார்.