Doctor Vikatan: இனிப்பு, உப்புச்சுவைகளை சிலர் தவிர்ப்பதுபோல, வயதானவர்கள் சிலர் காரச் சுவையையும் அடியோடு தவிர்த்து உண்கிறார்களே… அதனால் பாதிப்பு வராதா?
– Meenakshi Mohan. விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

தமிழர்களின் உணவிலும் சரி, சித்த மருத்துவத்திலும் சரி, அறுசுவை என்பது அடிப்படை தத்துவம். ஒரு மனிதனுக்கு நோய் வருவதும் வராததும் அடிப்படையான இந்த ஆறு சுவைகளின் அடிப்படையிலும் பஞ்சபூதங்களின் அடிப்படையிலும்தான் கணிக்கப்படும். எனவே ஒருவர் தனது உணவில் இந்த ஆறு சுவைகளையும் தொடர்ந்து பயன்படுத்தும்போது அவர்களுக்கு நோய்கள் வராது.
இவற்றில் எந்தச் சுவையையும் அதிகமாகவும் சாப்பிடக்கூடாது, குறைத்தும் சாப்பிடக்கூடாது. அளவோடு இருக்க வேண்டியது அவசியம். அதைத்தான் `மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்று சொல்கிறார்கள். எந்தச் சுவையையும் அதிகமாகச் சாப்பிட்டால் அதன்மூலம் நோய் வரும். அந்தச் சுவையை அறவே தவிர்ப்பதாலும் நோய் வரும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து மயக்கநிலை ஏற்படும்போது உடனே கொடுக்கப்படுவது சாக்லேட்டோ, வெல்லமோ, ஸ்வீட்டோ… இப்படி சர்க்கரைச் சத்துதான். உடனே வெள்ளை சர்க்கரை நல்லது போல என்ற முடிவுக்கு வர வேண்டாம். சர்க்கரைச்சத்து என்பது கார்போஹைட்ரேட் உணவுகளில் இருக்கும். இது அறுசுவைகளுக்கும் பொருந்தும். காரமும் அப்படித்தான்.

காரச்சுவை என்பது பசியைத் தூண்டும், செரிமானத்துக்கு நல்லது. ரத்தச் சுத்திகரிப்புக்கு உதவும். பி.எம்.ஐ அளவை சரியாக வைத்திருக்க உதவுவதன் மூலம் எடைக்குறைப்புக்கும் உதவும். உடலில் நீர் சேர்ந்திருந்தால் வெளியேற்றும். நுரையீரலில் உள்ள கழிவுகளை அகற்றும். அதனால்தான் நுரையீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு மிளகு மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. உடலிலுள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றுவதால் சிறுநீரகங்களுக்கும் நல்லது.
காரம் என்றதும் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், மிளகாய்த்தூள் என அர்த்தம் எடுத்துக்கொண்டு, அவை ஏற்றுக்கொள்ளவில்லை என நினைக்க வேண்டாம். இஞ்சி, மிளகு, பூண்டு, வெங்காயம் போன்றவை காரச்சுவை கொண்டவைதான். இதே காரச்சுவை அளவைத் தாண்டினால் உடல் சூடு அதிகரிக்கும், வியர்வை அதிகமாகும். எரிச்சல் கூடும். குடல் புண்கள் ஏற்பட்டு எரிச்சல் வரலாம். சாப்பிட்டாலே வயிறு வலிக்கலாம். வயிற்றுப்புண் இருப்பவர்கள் காரச்சுவையைக் குறைத்துக் கொள்ளலாம்.

மற்றபடி சிறு துண்டு இஞ்சி, சிறிது மிளகு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். உடல் சூடு அதிகரிக்குமோ என பயந்தால் கூடவே சிறிது வெந்தயமும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். மற்றபடி இந்தச் சுவையை அறவே தவிர்க்கத் தேவையில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.