இஸ்ரேலிய பாதுகாப்புப்படையினர், பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் இடையே மோதல் – 2 பேர் சுட்டுக்கொலை

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல், பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக்கரையின் ஜெரிகோ அகதிகள் முகாமில் இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினர். தேடப்படும் குற்றவாளி அகதிகள் முகாமில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது.

அப்போது அங்கு இருந்த பாலஸ்தீனியர்களில் சிலர் இஸ்ரேலிய பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து இஸ்ரேலிய படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்பிற்கும் இடையே மோதல் நடைபெற்ற நிலையில் இஸ்ரேலிய படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 16 வயது சிறுவன் உள்பட இரு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். முகமது நுஜூம் (வயது 25), குவாசி அல் வாலாஜி (வயது 16) ஆகிய இரு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.

உயிரிழந்த இருவரும் பாலஸ்தீனிய ஆயுதக்குழுவை சேர்ந்தவர்களா? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. இந்த மோதலையடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.