மோடி சுட்ட ஊசிப் போன வடை: இறங்கி அடித்த ஸ்டாலின் – திமுக வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தில் தெறி பேச்சு!

திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் ராமநாதபுரத்தில் இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்று வாக்குச்சாவடி முகவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் மோடி அரசையும் கடுமையாக விமர்சித்தார்.

மக்களவைத் தேர்தலை குறிவைத்து நாடு முழுவதும் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் திமுகவும் இறங்கியுள்ளது. இந்தியா கூட்டணியில் திமுக முக்கிய பங்கு வகிக்கிறது.

கூட்டணி தொடர்பான பணிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் போது சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் தேர்தல் பணிகளில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்று அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையிலும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

திருச்சியில் சமீபத்தில் நடைபெற்ற வாக்குச் சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், வாக்குச் சாவடி முகவர்களின் பணிகள் குறித்து எடுத்துக் கூறினார்.

அதேபோல் இன்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற வாக்குச் சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

குருவாயூர் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்; தங்க கிரீடம் காணிக்கை!

“முகவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாக்குச் சாவடிக்குட்பட்ட பகுதியில் தினமும் 10 வீடுகளுக்குச் சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துரைக்க வேண்டும். சில வீடுகளில் உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். சில இடங்களில் அதை எதிர்பார்க்க முடியாது. என்னைப் பொறுத்தவரை நம் அரசைப் பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன்.

குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அரசின் ஏதாவது ஒரு திட்டத்தால் பலனடைந்தவர்களாகவே இருப்பார்கள். நமது திட்டங்களை சாதனைகளை சொல்லி வாக்கு கேளுங்கள். அதிமுக, பாஜகவினர் எதையும் செய்யாமல் செய்தது போன்று சமூகவலைதளங்களில் பதிவு இடுவார்கள். அதை மறுத்து அரசின் சாதனைகளை நீங்கள் சமூக வலைதளங்களில் கூற வேண்டும். அதற்காக சமூகவலைதளங்களில் கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக தொடங்க வேண்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே என்று நான் சொல்வது உங்களை நம்பித்தான்.

பாஜக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ராமநாதபுரத்துக்கு 2014 தேர்தலுக்கு முன்பாக வந்த மோடி, இராமேஸ்வரத்தை உலக சுற்றுலா மையமாக மாற்றுவேன் என்று கூறினாரே, மாற்றிவிட்டாரா?

கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக சொன்னாரே 15 ஆயிரமாவது போட்டாரா? மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்துவோம் என்று சொன்னாரே, தொடர்ந்து மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகித் தானே வருகின்றனர்.

தினமும் பல வடைகளை அவர் சுட்டுத்தள்ளுகிறார். அவை எல்லாம் ஊசிப் போய்விட்டன” என்று பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.