மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தளர்வுகள்: தமிழக அரசு சொன்ன செம குட் நியூஸ்!

பெண்கள் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை பெறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதி வாய்ந்த பயனாளர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் சில நிபந்தனைகள் வகுத்து வெளியிடப்பட்டன. தற்போது அவற்றில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளதால் ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பயன்பெற வாய்ப்பு உருவாகியது.

மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாம்கள்!செப்டம்பர் 15ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை திட்டம் காஞ்சிபுரத்தில் தொடங்க உள்ளது. அன்றைய தினமே தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பயனாளர்களின் வங்கி கணக்குக்கும் 1000 ரூபாய் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற மகளிர் உரிமைத் தொகை முகாம்களில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கான இன்று முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
தகுதி வாய்ந்தவர்கள் யார்?மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக ஆரம்பத்தில் வெளியான அறிவிப்பில், “முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற தொடர் சமூக பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தோர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் பெற தகுதி இல்லாதவர்கள்” என கூறப்பட்டது. அரசின் இந்த அறிவிப்பு விமர்சனத்துக்கு உள்ளானது.
தமிழக அரசு தளர்வுகள் அறிவிப்பு!முதியோர் தங்கள் தேவையை பூர்த்தி செய்ய அரசு ஓய்வூதியம் வழ்ங்கும் போது, அரசு அறிவித்துள்ள பொருளாதாரத் தகுதிக்குள் வந்தும், தங்களது குடும்பத்தில் ஒருவர் முதியோர் ஓய்வூதியம் பெறுகிறார் என்பதற்காக மகளிர் உரிமைத் தொகை பெற முடியாது என்று கூறுவது சரியல்ல, என்று விமர்சனங்கள் எழுந்தன. நமது சமயம் தமிழிலும் இது குறித்து ஆரம்பத்திலேயே பதிவு செய்திருந்தோம். இந்நிலையில் தமிழக அரசு இது தொடர்பான கோரிக்கைகளை ஏற்று தளர்வுகளை அறிவித்துள்ளது.
யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு!வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள பெண்களும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
1.54 கோடி விண்ணப்பங்கள்!எனவே மேற்குறிப்பிட்ட பெண்கள் இன்னும் பதிவு செய்யவில்லை என்றால் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 18,19,20 ஆகிய தேதிகளில் இந்த முகாம்கள் நடைபெறுகின்றன. இரண்டு முகாம்களிலும் இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சிறப்பு முகாம்களில் மேலும் சில லட்சம் விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவ்தாஸ் மீனா உத்தரவு!ஒரு கோடி பேர் மட்டுமே பயனாளர்களாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. திட்டம் தொடங்கப்பட இன்னும் ஒரு மாத காலம் கூட இல்லாத நிலையில் பணிகளை விரைவுபடுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அரசு உயர் அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.