ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் 18 வயது நிரம்பிய, ஜேஇஇ நுழைவு தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது ஒருபுறம் என்றால், மறுபுறம் இந்தாண்டில் மட்டும் அங்கு தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக உள்ளது என்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரம் ஐஐடி – ஜேஇஇ நுழைவுத் தேர்வு, நீட் நுழைவுத் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும் இடங்களில் முக்கியமானது. இங்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் வந்து தனியார் கோச்சிங் மையங்களில் தங்கிப் படிப்பதுண்டு. கோச்சிங் ஹப் என்று அழைக்கும் அளவுக்கு இந்த பகுதி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நுழைவுத்தேர்வில் வெற்றி பெற பலரும், இப்பகுதியில் உள்ள பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பணம் கட்டி படிக்கின்றனர். நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத்தேர்வுகளின் தலைநகரமாக அறியப்படும் கோட்டா நகரில் நடப்பாண்டில் மட்டும் 22 மாணவர்கள் தற்கொலை செய்து உள்ளனர் என்பது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பீகார் மாநிலம் கயாவை சேர்ந்த மாணவர் ஒருவர் கோட்டாவின், மகாவீர் நகர் பகுதியில் கடந்தாண்டு முதல் தங்கி ஜேஇஇ மெயின் தேர்வுக்கு தயாராவதற்காக பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படித்து வந்திருக்கிறார். கடந்த செவ்வாய்கிழமை இரவு இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என செய்தி பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இதனால் இந்த ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது மற்றும் இது இந்த மாதத்தில் நான்காவது தற்கொலையாக இருக்கிறது.
சில நாள்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கரை சேர்ந்த மாணவர் கோட்டாவில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனத்தில் ஜேஇஇ தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்த நிலையில் தற்கொலை செய்து செய்து கொண்டார். அடுத்தடுத்து கோட்டா நகரத்தில் ஏற்பட்ட தற்கொலைகள் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை ஜெய்ப்பூரில் நடந்த விழாவில் ஒன்றில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கோட்டாவில் அதிகரித்து வரும் மாணவர்கள் தற்கொலை குறித்து கவலை தெரிவித்திருக்கிறார். “கடந்த எட்டு மாதங்களில் 22 மாணவர்கள், குறிப்பாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர், இது அரசுக்கு மிகுந்த கவலை அளிப்பதாகவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை குறிப்பிட்ட படிப்பை தான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அவர்களுக்கு மன அழுத்தம் தர வேண்டாம்’’ என்றும் தெரிவித்திருக்கிறார். தனது முன்அனுபவங்களை மேற்கோள் காட்டிய அசோக் கெலாட் சிறுவயதில் டாக்டராக வேண்டும் என ஆசைப்பட்டு இரவு 2-3 மணி வரை படித்தேன், ஆனால் தேர்வில் வெற்றி பெறமுடியவில்லை. இருப்பினும் நம்பிக்கை இழக்காமல் எனக்கான மற்றொரு பாதையை நானே உருவாக்கிக் கொண்டேன். எனவே மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தால் மனம் தளராமல், தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுக்காமல் தங்களுக்கான மாற்று பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

இந்த நிலையில், தற்கொலைகளைத் தடுக்கும் விதமாகக் கோட்டாவிலுள்ள விடுதிகள், PG (Paying Quest) விடுதிகள் ஆகியவற்றில் ஸ்ப்ரிங் லோடெட் மின்விசிறிகளை (Spring-Loaded Fans) நிறுவ மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும் அங்கு இருக்கும் பயிற்சி மையங்கள் மாணவர்களுக்கு மன நல ஆலோசனைகள் வழங்கவும், அது தொடர்பாக கண்காணிப்புகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.