சந்திரயான் 3 : நிலவு இப்படித்தான் இருக்குமா? – அசரவைத்த புகைப்படங்கள்…

சினிமா பாடல்களாக இருந்தாலும் கவிதைகளாக இருந்தாலும் பெண்களின் முக அழகை நிலவுடன் ஒப்பிட்டே கவிஞர்கள் வர்ணித்து வந்தனர். இப்போது இஸ்ரோ வெளியிட்டுள்ள நிலவின் புகைப்படங்கள் கவிஞர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்ட வகையில் உள்ளன.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் – 3 விண்கலத்தை இந்திய விண்வெணி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜூலை 14ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவாண் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது. அதன் அடுத்தடுத்த நகர்வுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.

நிலவில் தரையிறங்க உள்ள விக்ரம் லேண்டர் சந்திரயான் விணகலத்தில் இருந்து நேற்று வெற்றிகரமாக பிரிந்தது. இந்த நிலையில் சந்திரயான் விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 15, 17 தேதிகளில் எடுத்த நிலவின் புகைப்படங்களை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.

பிரமிக்கத்தக்க வகையில் உள்ள அந்த புகைப்படக்கள் லேண்டர் கேமரா – 1 மூலம் எடுக்கப்பட்டவை. நிலவிலுள்ள பள்ளங்கள் புகைப்படங்களில் தெளிவாக உள்ளன. அதில் ஜியோர்டானோ புருனோ பள்ளமும் ஒன்று. இது நிலவில் உள்ள பெரிய பள்ளங்களில் ஒன்றாக உள்ளது. ஏறத்தாழ 43 கி.மீ விட்டம் கொண்ட ஹர்கேபி ஜே பள்ளத்தையும் லேண்டர் கேமரா படம் பிடித்து அனுப்பியுள்ளது.

இறுதிக் கட்டத்தில் பயணிக்கும் லேண்டர் வரும் 23ஆம் தேதி 30 கி.மீ தொலைவிலுள்ள பெரிலூன் எனப்படும் நிலவிற்கு நெருக்கமான பகுதியை அடைய வேண்டும். அங்கிருந்து இறுதி தரையிறக்கம் செய்யும் பணிகள் நடைபெறும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.