சந்திராயன் 3 திட்டத்தை சாதித்து காட்டிய தமிழர்.. வீரமுத்துவேலுக்கு குவியும் பாராட்டு!

டெல்லி:
சந்திராயன் 3 திட்டத்தின் கீழ் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு வெற்றிகரமாக நிறைவேறியதை அடுத்து, இந்த திட்டத்தின் இயக்குநரான தமிழர் வீரமுத்துவேலைுவை சக விஞ்ஞானிகள் பாராட்டு மழையில் நனைத்து வருகின்றனர்.

நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன் 3 திட்டத்தின் முதல் படியை இந்தியா வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த சந்திராயன் 2 திட்டத்தில் நிலவில் மோதி லேண்டர் நொறுங்கியதால் நமது இந்திய விஞ்ஞானிகளும் நொறுங்கி போயினர். ஆனால், மீண்டும் தன்னம்பிக்கையுடன் சந்திராயன் 3 திட்டத்தை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

இந்நிலையில், விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதும் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் அடுத்த நொடியே பார்த்தது இந்த சந்திராயன் 3 திட்டத்தின் இயக்குநரான வீரமுத்துவேலுவை தான். ஏனெனில், இந்த திட்டத்திற்காக இரவும் பகலும் உழைத்தவர்களில் முக்கியமானவர் வீரமுத்துவேல். மேலும், அந்த கடினமான பணிகளுடன் சக விஞ்ஞானிகளை ஒருங்கிணைத்தும், வழிநடத்தியும் அவர் சென்றிருக்கிறார்.

விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு சில நிமிடங்கள் வரை வீரமுத்துவேலின் முகம் இறுகிப் போயிருந்தது. ஏதேனும் தவறு நிகழ்ந்து விடுமோ, ஓராண்டுக்கும் மேலாக இரவு பகல் பாராமல் உழைத்தது வீணாகி விடுமோ என்ற கேள்வி அவரது முகத்தில் தெரிந்தது. ஆனால், விக்ரம் லேண்டர் தரையிறங்கியதும் அப்படியே அவரது முகம் மலர்ந்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார். அவரை சக விஞ்ஞானிகள் அனைவரும் சூழந்துகொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய வீரமுத்துவேல், “விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது நமது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி. என்னுடன் இந்த திட்டத்தில் பங்களித்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நிலவில் இந்தியா கால் பதித்துவிட்டதை இன்று உலகமே பார்த்து வியந்து வருகிறது. இந்த திட்டத்தில் எங்களுக்கு முழு ஒத்துழைப்பும், உதவியும் வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய அரசுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.