கணவரை விட்டுப் பிரிந்த ஒரு பெண், 2017-ம் ஆண்டு தன் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் சொல்வதுபோல் எதுவும் நடக்கவில்லை என்று கூறி, அவர் அளித்த புகார்களை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் கணவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த திங்கள் அன்று இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுபேந்து சமந்தா, பெண்கள் சட்ட பயங்கரவாதத்தை கையிலெடுப்பதாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது பேசிய நீதிபதி, `2017-ம் ஆண்டு அக்டோபரில் அந்தப் பெண் தனக்கு எதிராக நடந்த மன மற்றும் உடல் ரீதியிலான கொடுமைகள் குறித்துக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும் அதே வருடம் டிசம்பரில் தன் கணவரை விட்டுப் பிரிந்த அந்தப் பெண், கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது கடுமையான குற்றச்சாட்டையும் பதிவு செய்துள்ளார்.
ஆனால் கணவர் செய்த முதன்மையான குற்றத்தை நிரூபிக்க எந்த ஆதாரமும் பதிவு செய்யப்படவில்லை. குற்றச்சாட்டை அந்தப் பெண் வாய் வார்த்தைகளால் மட்டுமே கூறியுள்ளார். அதற்கான ஆவணச் சான்றோ, மருத்துவச் சான்றோ எதுவும் இல்லை.
மேலும் பக்கத்து வீட்டுக்காரர், கணவர் மற்றும் மனைவிக்கு இடையேயான சண்டையைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளார். இரண்டு நபர்களின் சண்டையில் யார் ஆதிக்கம் உள்ளது, அதனால் யார் பாதிக்கப்பட்டது என்பது குறித்து ஆதாரங்களும் இல்லை.
ஆகவே பெண்ணின் தனிப்பட்ட வெறுப்பை நிறைவேற்றுவதற்காக இந்தப் புகார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது’ எனக் கூறினர் நீதிபதி.

மேலும், `சமூகத்திலிருந்து வரதட்சணை அச்சுறுத்தலைத் தடுக்கவே பிரிவு 498A உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த விதியை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் புதிய சட்ட பயங்கரவாதம் கையாளப்படுவது பல சந்தர்ப்பங்களில் கவனிக்கப்படுகிறது. எனவே கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது அந்தப் பெண் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது’ என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.