நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் ஓ.பி.எஸ்., டி.டி.வி-க்கு இடம் உண்டா?!

நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன என்றாலும், அந்தத் தேர்தலுக்கான பரபரப்பு இப்போதே தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தி.மு.க தலைமையிலான கூட்டணி அப்படியே தொடர்கிறது. அதில், எந்த மாற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், பா.ஜ.க இடம்பெற்றிருக்கும் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கின்றன, இருக்கப்போகின்றன என்பது பற்றிய தெளிவு இன்னும் ஏற்படவில்லை.

பன்னீர், தினகரன், எடப்பாடி

குறிப்பாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க ஆகியவை அ.தி.மு.க – பாஜக கூட்டணியில் இடம்பெறுமா என்பது குறித்து பல்வேறு விதமான செய்திகள் அலசப்படுகின்றன.

இந்த நிலையில், ‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை பிரதமராக்குவதில் தமிழகத்தின் பங்கு இருக்க வேண்டுமென நான் நினைத்தேன். அதனால், பா.ஜ.க கூட்டணிக்கு வர வேண்டிய வாக்குகள் சிதறக் கூடாது என்பதால், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் குறித்து அகில இந்திய தலைமையிடம் பேசினேன்’ என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை சமீபத்தில் கூறினார்.

அண்ணாமலை

மேலும், ‘ஒரு சில விஷயங்களில் அ.தி.மு.க பிடிவாதமாக இருப்பதால், அகில இந்திய தலைமை பெரியளவில் ஈடுபாடு காட்டவில்லை. நம்மால் இந்த கூட்டணியில் எந்த விரிசலும் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்’ என்றும் அண்ணாமலை கூறினார். அண்ணாம்லையின் கருத்து, அ.தி.மு.க கூட்டணி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்ணாமலையின் கருத்துக்குப் பிறகு, ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், ‘பா.ஜ.க கூட்டணியில் அ.ம.மு.க இல்லை’ என்று கூறினார். மேலும், ‘இனி வரும் காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்துதான் பயணிப்போம். பா.ஜ.க கூட்டணியில் அ.ம.மு.க இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க-வின் நிலைப்பாடு குறித்து டிசம்பர் மாதத்தில் தெரிவிக்கப்படும்’ என்றார் டி.டி.வி.தினகரன்.

பன்னீர்செல்வம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உடனடி விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க கோரி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதற்கு, அ.ம.மு.க ஆதரவு அளித்திருக்கிறது. தேனியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் பங்கேற்றார். அ.தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், தினகரனுடன் கைகோத்திருக்கிறார். மேலும், சசிகலா ஆதரவு நிலைப்பாட்டையும் அவர் எடுத்திருக்கிறார்.

எனவே, அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இவர்கள் இருவரையும் சேர்த்துக்கொள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமி எப்படி உடன்படுவார்? இது பற்றிய பேச்சையே அவர் விரும்ப மாட்டார் என்பதைத்தான், இவர்கள் இருவர் குறித்தும் இதுவரை எடப்பாடி பழனிசாமி பேசிவந்திருக்கும் கருத்துக்கள் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் கூட்டணிக்கு டி.டி.வி. தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் வந்தால் இணைந்து செயல்படுவீர்களா..’ என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, ‘தமிழகத்தைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணிக்கு அ.தி.மு.க தலைமை தாங்குகிறது. தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க இருக்கிறது’ என்றார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் தேர்தல் நேரத்தில் இன்னும் சில கட்சிகள் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறினார்.

டிடிவி தினகரன்

‘இந்தியா’ கூட்டணிக்கு போட்டியாக டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு பா.ஜ.க அழைப்பு விடுத்தது. ஆனால், ஓ.பி.எஸ்ஸை அழைக்கவில்லை. அது குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘என்.டி.ஏ கூட்டணி கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு வரவில்லை. அதனால் நான் செல்லவில்லை. அவர்களாக (பா.ஜ.க) முறித்துக்கொள்ளும் வரையில் நான் அந்தக் கூட்டணியில் தொடருவேன்’ என்றார்.

இதற்கிடையில், ‘ஓ.பன்னீர்செல்வத்தை இந்தியாவும் அழைக்கும், ‘இந்தியா’ கூட்டணியும் அழைக்கும்’ என்று கூறி கலகலப்பை உண்டாக்கியிருக்கிறார் ஓ.பி.எஸ் அணியின் கொள்கைப் பரப்புச் செயலாளரான பெங்களூர் புகழேந்தி. மறுபுறம் ஓ.பி.எஸ், டி.டி.வி ஆகிய இருவரும் பொது எதிரி திமுக தான் என பேசி வருவதால், கூட்டணி காட்சிகள் எப்படி எப்படி மாறும் என போக போக தான் தெரியும்.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.