ஆசிய கோப்பை; கே.எல்.ராகுலை தேர்வு செய்தது ஏன்…? – முன்னாள் தேர்வு குழு தலைவர் கேள்வி

சென்னை,

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

காயம் காரணமாக ஆபரேசன் செய்து கொண்ட கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அணிக்கு தேர்வாகி உள்ளனர். இருவரது உடல் தகுதியை சோதிக்காமலேயே தேர்வானது விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது.

அதோடு செப்டம்பர் 2-ந் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போடியில் கே.எல்.ராகுல் ஆடுவது சந்தேகம் என்றும் தேர்வுக்குழு தலைவர் அஜீத் அகர்கர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் முழு உடல் தகுதி இல்லாமல் இருக்கும் கே.எல்.ராகுல் ஆசிய கோப்பை அணிக்கு தேர்வு செய்தது ஏன்? என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கே.ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

கே.எல்.ராகுல் காயத்தில் இருந்து முழுமையாக குணமாகவில்லை என்று தேர்வு குழுவினர் தெரிவித்துள்ளனர். அப்படி இருக்கும்போது அவரை தேர்வு செய்தது ஏன்? தேர்வின்போது ஒரு வீரர் தகுதியற்றவராக இருந்தால் நீங்கள் அவரை தேர்வு செய்யக்கூடாது.

இதுதான் எங்களின் கொள்கையாக இருந்தது. தேர்வு செய்யப்படும் நாளில் ஒரு வீரர் உடல் தகுதியுடன் இல்லாவிட்டால் அவரை தேர்வு செய்யக் கூடாது.

நீங்கள் அவரை (கே.எல்.ராகுல்) உலக கோப்பைக்கு தேர்வு செய்ய விரும்பினால் அதற்காக மட்டும் தேர்ந்து எடுக்கவும். தேர்வு குழுவினர் விளக்கம் சரியாக இல்லை. இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.