புதுடில்லி :, புதுடில்லி நிர்வாக அதிகார விவகாரத்தில் கொண்டு வரப்பட்ட அவசர சட்டம், சட்டமாகி விட்டதால், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் திருத்தம் மேற்கொள்ள, புதுடில்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அரசுக்கே உரிமை
யூனியன் பிரதேசமான தலைநகர் புதுடில்லியில், ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., உள்ளிட்ட அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதற்கு, ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உரிமை உள்ளது’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதில் துணைநிலை கவர்னருக்கு முழு அதிகாரம் அளிக்கும் வகையில், மத்திய அரசு உடனடியாக அவசர சட்டத்தை கொண்டு வந்தது. இதை எதிர்த்து, புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஒப்புதல்
இதற்கிடையே, சமீபத்தில் நடந்து முடிந்த பார்லி., மழைக்காலக் கூட்டத்தொடரில், புதுடில்லி நிர்வாக அதிகார மசோதா, லோக்சபா, ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாறியது.
இதற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், இந்த அவசர சட்டம் சட்டமாக மாறி விட்டதால், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், புதுடில்லி அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி நேற்று அனுமதி கோரினார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், திருத்தப்பட்ட மனு குறித்து நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement