கும்பகோணம்: காவிரி பிரச்சினையில் கர்நாடகா காட்டுகின்ற அளவுக்கு தமிழக அரசு அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் காட்டமாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கும்பகோணத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தின் தலைவர் டி.சம்பந்தம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: > காவிரி பிரச்சினையில் கர்நாடகா காட்டுகின்ற அளவுக்கு தமிழக அரசு அதிகம் ஆர்வம் காட்டவில்லை. உடனடியாக குறுவை பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளிகளுக்கு சுமார் ரூ.700 கோடி இழப்பீட்டினை கர்நாடகா அரசிடமிருந்து இருந்து பெற்றுத் தருவதற்கு, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்.
> நிகழாண்டில் சம்பா சாகுபடி மிகப் பெரிய அச்சத்தை விவசாயிகளிடையே ஏற்படுத்தியிருப்பதைக் கவனத்தில் கொண்டு உடனடியாக, தமிழக அரசு, விவசாய பிரதிநிதிகள் மற்றும் அனைத்து கட்சித் தலைவர்களுடன் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரை நேரில் சந்தித்து இதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்த வேண்டும்.
> 58 வயது நிறைவடைந்த அனைத்து விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள் அனைவருக்கும் மாதாந்திர ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.5000-ம் வழங்கிட வேண்டும்.
> நெல் கோதுமை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4000-ம், கரும்பிற்கு டன் ஒன்றிற்கு ரூ. 5000-ம் தேங்காய் கொப்பரைக்குக் கிலோ ஒன்றுக்கு ரூ. 180-ம் எனக் கொள்முதல் விலையாக அறிவிக்க வேண்டும்.
> வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்ற பாமாயிலை முற்றிலுமாக தடை செய்து, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்யைக் கொள்முதல் செய்ய வேண்டும்.
> தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், விவசாயப் பயிர் கடன்களை, வட்டி இல்லாமல் வழங்க வேண்டும்.
> விவசாயிகளின் குழந்தைகளுக்கு வட்டியில்லா கல்விக் கடன் வழங்க வேண்டும்.
> தெலுங்கானா, ஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் விவசாயிகளுக்கு உற்பத்தி ஊக்கத் தொகை மானியமாக ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் வழங்குவது போல், அனைத்து மாநில விவசாயிகளுக்கும், மத்திய அரசின் நிதி உதவி கிடைப்பதற்கான உத்தரவாதம் தருகின்ற அரசியல் கட்சிகளை மட்டுமே விவசாயிகள் ஆதரிப்பது,
இத்தகைய வாக்குறுதிகளை வழங்காத அரசியல் கட்சிகளை, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், அவர்களைப் புறக்கணித்து விட்டு, நோட்டாவில் வாக்களிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.