லண்டன்: “பா.ஜ., பேசும் கொள்கைகளில் ஹிந்துயிசமோ, ஹிந்து தத்துவமோ இல்லை என்பதால் அவர்களுக்கும் ஹிந்து மதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை,” என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்து உள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள காங்., – எம்.பி., ராகுல், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள முன்னணி சமூக அறிவியல் நிறுவனமான பாரிஸ் பல்கலையில், மாணவர்கள் மத்தியில் நேற்று முன்தினம் உரையாற்றினார்.
‘இந்தியாவின் வெளியுறவு கொள்கை நிலைப்பாடு’ என்ற தலைப்பில் பேசிய அவர், மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்; அப்போது ராகுல் பேசியதாவது:
இந்தியாவில், 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை மிக அதிகளவில் உயர்ந்துள்ளது. நான் பகவத் கீதையை படித்துள்ளேன்.
பல்வேறு ஹிந்து தத்துவ நுால்களையும் படித்துள்ளேன். என்னிடம் பல உபநிடதங்கள் உள்ளன. பா.ஜ., பேசும் ஹிந்துயிச கொள்கை குறித்து எந்த புத்தகத்திலும் நான் படித்ததில்லை.
ஹிந்து என பா.ஜ., குறிப்பிடும் எதுவும் உண்மையில் ஹிந்து மதத்தில் இல்லை. ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வின் செயல்பாடுகளுக்கும், ஹிந்து மதத்துக்கு எந்த தொடர்பும் இல்லை. ஹிந்து தேசியவாதம் என்பதே தவறான வார்த்தை.
இந்தியாவில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பா.ஜ.,வை ஆதரிப்பதாகக் கூறுவதில் உண்மையில்லை.
எந்த வழியிலாவது அதிகாரத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதே பா.ஜ.,வினரின் குறிக்கோள். நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை பாதுகாப்பதற்கான போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியா – பாரத் வேறுபாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த ராகுல், “இந்தியா, பாரத் ஆகிய இரண்டு வார்த்தைகளுமே ஏற்றுக் கொள்ளக் கூடியவை. இந்த இரண்டு சொல்லையும் அரசியல் சட்டம் பயன்படுத்துகிறது.
”எனவே இந்த சொற்களில் எந்த பிரச்னையையும் நான் பார்க்கவில்லை. எங்கள் கூட்டணிக்கு ‘இண்டியா’ என பெயரிட்டதால் பா.ஜ.,வுக்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம். பாரத் என்று அழைப்பதால் எந்த பிரச்னையும் இல்லை,” என்றார்.
பின், நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாமுக்கு செல்வதற்கு முன், பாரிசில் உள்ள இனால்கோ பல்கலையிலும் மாணவர்கள் மத்தியில் ராகுல் உரையாற்றினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்