“சமூக நீதி பற்றி பேச திமுகவினருக்கு எந்த அருகதையும் கிடையாது” – ஆர்.பி.உதயகுமார்

மதுரை: “ஜனாதிபதி தேர்தலில் பழங்குடி இனத்தை சேர்ந்த திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிக்காத திமுக, சமூக நீதியை பற்றி பேசலாமா?” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்தில், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார், ‘‘விளையாட்டு துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்தனமாக சில கருத்துகளை உளறி வருகிறார். யார் எழுதி கொடுத்தது என்று தெரியவில்லை.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த ப.தனபாலை சட்டமன்ற பேரவைத் தலைவராக அமர்த்தினார். முதலமைச்சர் முதல் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரி வரை அவர் சபைக்கு வரும்போது எழுந்து நின்று வணங்கும் படியான கவுரவத்தை உருவாக்கி கொடுத்தார். அதுதான் சமூக நீதி.

ஆனால், சபாநாயர் இருக்கையை நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, சேதப்படுத்தி தனபாலின் சட்டையை கிழித்து, அவமானப்படுத்தினர் திமுகவினர். இதுதான் சமூக நீதிக்கு கொடுக்கின்ற மரியாதையா? இப்படி ஒரு சம்பவத்தை செய்தவர்கள் சமூக நீதி பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது. இதற்கான விளக்கத்தை உதயநிதி ஸ்டாலின் கூற வேண்டும்.

ஐந்து முறை திமுக ஆட்சி இருந்தபோது என்ன சமூக நீதியை நிலைநாட்டினார்கள் என்பதை உதயநிதி ஸ்டாலின் சொல்ல முடியுமா? ஜனாதிபதி தேர்தலில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு வாக்கு சேகரிக்க வந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி அவருக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தார். ஆனால், திமுக எதிராக வாக்களித்தது. சமூக நீதியை பற்றி பேசுபவர்கள் இவருக்கு வாக்களிக்க வேண்டாமா?” இவ்வாறு அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.