புதுடில்லி :தங்கள் வாழ்நாளில் எந்த ஒரு தேசிய விருதும் பெறாத, 75 வயதுக்கு மேற்பட்ட, மூத்த கலைஞர்களுக்கு, சங்கீத நாடக அகாடமி சார்பில் சிறப்பு அமிர்த விருது நேற்று வழங்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட, 84 கலைஞர்களுக்கு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் இந்த விருதை வழங்கினார்.
சங்கீத நாடக அகாடமி சார்பில், சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இதுபோல, பல தேசிய அமைப்புகள் சார்பிலும் கலைஞர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.
நாட்டின், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இதுவரை எந்த ஒரு தேசிய விருதும் பெறாத, 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த கலைஞர்களுக்கு, சங்கீத நாடக அகாடமியின் சார்பில் சிறப்பு அமிர்த விருது வழங்கும் விழா, புதுடில்லி யில் நேற்று நடந்தது.
இதில், 84 பேருக்கு விருதுகளை வழங்கி துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசியதாவது:
உலகில் ஒரு சில நாடுகளுக்கு மட்டும், 500 – 700 ஆண்டு கலாசார வரலாறு இருக்கும். ஆனால், உலகிலேயே, 5,000 ஆண்டு கலாசார பெருமை உள்ள ஒரே நாடு, நம் நாடு.
நம் கலாசாரத்தை, பாரம்பரியத்தை கட்டிக்காக்கும் கலைஞர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன. தங்கள் வாழ்நாளையே, கலைக்காக அர்ப்பணித்துள்ள அனைத்து கலைஞர்களும் கவுரவிக்கப்படுவதை உறுதி செய்ய ஒரு வழிமுறை, கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
தங்கள் வாழ்நாளில், எந்த ஒரு தேசிய விருதும், கவுரவமும் கிடைக்காத கலைஞர்களின் கலைச் சேவையை கவுரவிக்கும் நோக்கோடு, இந்த சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நான்கு பேர் யார்?
சிறப்பு விருதுடன், ஒரு லட்சம் ரூபாய் பரிசு, தாமரை பத்திரம், அங்கவஸ்திரம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.மஹாராஷ்டிராவில் இருந்து ஆறு பேர், அசாம் மற்றும் ராஜஸ்தானில் இருந்து தலா ஐந்து பேர், ஆந்திரா, உத்தர பிரதேசம், குஜராத்தில் இருந்து தலா மூன்று பேர், அருணாச்சல்,
பஞ்சாப், புதுடில்லியைச் சேர்ந்த தலா இருவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தமிழகம், பீஹார், ஒடிசா, மேற்கு வங்கம், மணிப்பூர், மத்திய பிரதேசம், கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த, தலா நான்கு பேருக்கு விருது வழங்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த, நாதஸ்வர வித்வான் சுப்பராயன் சின்னத்தம்பி, 92, நாடக நடிகர் ராமமூர்த்தி சுந்தரேசன், 84, பரதநாட்டியக் கலைஞர் வி.ஏ.கே. ரங்காராவ், 83, வீணை இசைக் கலைஞர் ரமணி ரங்கன், 82, ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
புதுச்சேரியைச் சேர்ந்த, நாடக இசைக் கலைஞர் சுப்பையா முத்தையா காரை, 79, பொம்மலாட்டக் கலைஞர் வீராசாமி ஸ்ரீனிவாசன், 76, ஆகியோருக்கும் விருதுகள் வழங்கி
கவுரவிக்கப்பட்டது.மணிப்பூரைச் சேர்ந்த, 100 வயதாகும் நாத சங்கீர்த்தன கலைஞர் ஜத்ரா சிங், கேரளாவைச் சேர்ந்த, 94 வயதாகும் கதகளி கலைஞர் நம்பிராத்
அப்புன்னி தரக்கன் ஆகியோரும் விருது பெற்றுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்