ஐசிசி 13வது ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் பிரம்மாண்டமாக தொடங்கியிருக்கிறது. அக்டோபர் 5 ஆம் தேதியான இன்று முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் கிரிக்கெட் திருவிழா நடைபெறுகிறது. மொத்தம் 48 போட்டிகள். அனைத்து போட்டிகளும் ரவுண்ட் ராபின் முறையில் அணிகள் விளையாடுகின்றன. அதாவது, உலக கோப்பை விளையாடும் அனைத்து அணிகளுடனும் மற்ற அணிகள் மோத வேண்டும். லீக் சுற்றின் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இந்தியாவின் முதல் போட்டி
இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை தொடரில் அக்டோபர் 8 ஆம் தேதி முதல் விளையாட இருக்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்ள இருக்கிறது. உலக கோப்பை 2023-ன் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன.
உலக கோப்பை முதல் போட்டி வரலாறு
பொதுவாகவே எந்த நாடு உலககோப்பை தொடரை நடத்துகிறதோ அந்த அணிதான் முதல் லீக் போட்டியில் விளையாடுவது வழக்கம். குறிப்பாக 2003-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உலக கோப்பை நடைபெற்ற போது தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தான் முதல் போட்டியில் மோதின. அதேபோன்று 2007-ஆம் ஆண்டு போட்டிகள் மே.இ தீவுகள் நாட்டில் நடைபெற்றதால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் தான் முதலில் மோதின. அதனை தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெற்ற போது இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் தான் முதலில் மோதின.
அதேபோன்று 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஆஸ்திரேலியா நியூசிலாந்து நாட்டில் நடைபெற்றதால் அந்த இரு அணிகளும் தான் முதல் போட்டியில் மோதினர். ஏன் கடைசியாக 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உலக கோப்பை நடந்த போது இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் தான் முதலில் விளையாடியது. இப்படி எந்த நாடுகள் உலகக்கோப்பை தொடரினை நடத்துகிறதோ அந்த நாடுதான் முதல் லீக் போட்டியில் மற்றொரு அணியுடன் முதல் போட்டியில் பங்கேற்கும்.
இந்தியா விளையாடாதது ஏன்?
ஆனால் இம்முறை இந்தியாவில் உலககோப்பை போட்டிகள் நடைபெறவுள்ள வேளையில் இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளே முதல் போட்டியில் விளையாடுகின்றன. இதனால் இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஏன் விளையாடவில்லை? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது. அக்டோபர் 5-ஆம் தேதியான இன்று வியாழக்கிழமை என்பதால் பெரிய அளவில் ரசிகர்கள் போட்டியை பார்க்க மாட்டார்கள். வார இறுதி நாட்களில் தான் இந்தியாவில் கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் அதிகளவில் பார்ப்பார்கள். இதனை கருத்தில் கொண்டே இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் போட்டியை ஞாயிற்றுக் கிழமை வைத்துள்ளனர். மேலும், அதனால் தான் உலக கோப்பை முதல் லீக் போட்டியில் இந்திய அணி விளையாடவில்லை என்ற தகவலும் உலா வருகிறது.