டெல்லியிலுள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்குச் செல்லும் சம்பர்க் கிராந்தி விரைவு ரயிலில் பயணம் செய்த பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் மற்றும் அவரின் மனைவிமீது இளைஞர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியினரின் குற்றச்சாட்டின்பேரில், சம்பவத்தில் ஈடுபட்ட டெல்லியின் குதுப் விஹார் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ரித்தேஷ் குமாரை ஜான்சியின் ரயில்வே போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து, ரயில்வே பாதுகாப்புப் படையின் பொறுப்பாளர் ரவீந்திர கௌஷிக் கூறுகையில், “வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் உத்தரப்பிரதேச மாநிலம், மஹோபாவில் ரயிலில் ஏறிய, அந்த இளைஞன் ரயிலுக்குள் நுழையும்போது குடிபோதையில் இருந்துள்ளார்.

ஹர்பால்பூர் ஸ்டேஷனிலிருந்து சரியாக 45 நிமிடங்களுக்குப் பிறகு ரயிலில் ஏறிய ஓய்வுபெற்ற பேராசிரியரும் அவரின் மனைவியும் பி-3 கோச்சின் கீழ் பெர்த்தில் அமர்ந்திருக்க, மேல் பெர்த்தில் அமர்ந்திருந்த அந்த இளைஞன் சிறிது நேரத்திற்குப் பிறகு, தனது இருக்கையில் சிறுநீர் கழிக்கத் தொடங்கினார். தம்பதி அவரைத் தடுக்க முயன்றனர். இருப்பினும் அந்த இளைஞன் அவர்கள் இருவர் மேலும் சிறுநீர் கழித்துள்ளார். அந்த இளைஞன்மீது குடிபோதையில் இருந்ததாகவும், மற்றவர்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும் ரயில்வே சட்டத்தின் 145-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்து, அவரைக் கைதுசெய்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.