இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்! : 5,000 ஏவுகணைகள் வீச்சில் 100 பேர் பலி, 800 பேர் காயம்| Hamas terrorists infiltrated into Israel… sudden attack! 5,000 missiles were fired, killing 1-00 and injuring 800

ஜெருசலேம் : காசா மலைக்குன்று பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது நேற்றுபலமுனைகளில் இருந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டது. அந்த அமைப்பு, 5,000 ஏவுகணைகளை வீசியதுடன், இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதல்களில், 100 பேர் பலியானதாகவும், 800க்கும் மேற்பட்டோர்காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. ”போர் துவங்கிவிட்டது. எதிரிகள் எதிர்பாராத விலையை கொடுக்க நேரிடும்,” என,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆவேசமாக குறிப்பிட்டார்.

மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல், போர்கள் நடந்து வருகின்றன. முதலாம் உலகப் போரின்போது, ௧௯௧௭ல் துவங்கிய யூதர்களுக்கான நாடு என்ற இந்த பிரச்னை, உலகின் மிக நீண்டகாலமாக தீர்வு காணப்படாத பிரச்னையாக விளங்குகிறது.

‘வெஸ்ட் பேங்க்’ என்படும் மேற்கு கரை மற்றும் காசா மலைக்குன்று ஆகியவை அடங்கியதே பாலஸ்தீனத்தின் பகுதிகளாகக் கூறப்படுகிறது. மத்திய தரைக்கடலை ஒட்டியுள்ள காசா மலைக்குன்று பகுதியை, ஹமாஸ் எனப்படும் பயங்கரவாத அமைப்பு தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்னை ஒருபுறம் இருக்க, இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான பிரச்னை மறுபுறம் துவங்கியது. இரு தரப்பும் பரஸ்பரம் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இஸ்ரேல் மற்றும் காசா மலைக்குன்று பகுதியை பிரிக்கும் எல்லையில், ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் அதி நவீன பாதுகாப்பு வசதி இஸ்ரேலால் அமைக்கப்பட்டு உள்ளது.

கண்காணிப்பு கேமராக்கள், ‘சாட்டிலைட்’ வாயிலாக கண்காணிப்பு, ரேடார் வாயிலாக கண்காணிப்பு என, இஸ்ரேலின் தெற்கே உள்ள இந்த எல்லை பகுதியில் பலத்த பாதுகாப்பு உள்ளது.

கடுமையான சண்டை

இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் நேற்று அதிகாலையில் இஸ்ரேலுக்குள் ஊடுருவினர். பாராகிளைட் எனப்படும் சிறிய விமானங்கள் மற்றும் கடல் மார்க்கமாக, இஸ்ரேலின் எல்லைக்குள் ஏழுக்கும் மேற்பட்ட பகுதிகள் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவினர்.

அவர்களை தடுக்கும் முயற்சியில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டது. இதனால், எல்லை பகுதிகளில் கடுமையான சண்டை நடந்தது.

இந்நிலையில், காசா மலைக்குன்று பகுதியில் இருந்து, இஸ்ரேல் நோக்கி ஏவுகணை தாக்குதலிலும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டது.

இவ்வாறு, 5,000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை, சில மணி நேரத்துக்குள் பயங்கரவாதிகள் தொடர்ந்து செலுத்தினர்.

இந்த தாக்குதல்களில், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை தன் முகத்தை வெளியுலகுக்கு காட்டாத, ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவு தலைவரான முகமது டெய்ப் பேசிய ‘வீடியோ’ நேற்று வெளியிடப்பட்டது. அதில் அவர் கூறியுள்ளதாவது:

மக்கள் தங்களுடைய தீர்மானமான உறுதியை வெளிப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. கிழக்கு ஜெருசலேம் உட்பட இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனியர்கள் தற்போது ஒன்று திரள வேண்டும். இஸ்ரேலுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளில் அனைவரும் ஒன்றிணைந்து, ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலை வெளியேற்றுவோம்.

மற்ற நாடுகளில் உள்ள அரேபியர்கள் மற்றும் முஸ்லிம்கள் இதில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். ஈரானின் ராணுவ உதவியை பெறும் லெபனான், ஈராக், சிரியாவில் இயங்கி வரும் இஸ்லாமிய படைகள் ஒருங்கிணைந்து, பாலஸ்தீனம் நோக்கி வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த அதிரடி தாக்குதல்கள், இஸ்ரேலிய மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளன. மக்கள் தங்களுடைய வீடுகளிலேயே இருக்கும்படியும், பாதுகாப்பு பதுங்கு குழிகளில் தங்கும்படியும் ராணுவம் எச்சரித்துள்ளது.

பதிலடி

இந்த விவகாரம் பெரிதான நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘டிவி’ வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

ஹமாஸ் பயங்கரவாதிகள் நம் நாட்டின் மீதும், நம் மக்கள் மீதும் திடீரென கொலை வெறி தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்தும் முயற்சி நடந்து வருகிறது.

இனி அந்த அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளோ, ஆப்பரேஷன்களோ நடத்தப் போவதில்லை. நாம் தற்போது அந்த அமைப்புக்கு எதிரான போரில் உள்ளோம்.

நம்முடைய அனைத்து சக்திகளையும் திரட்டி வருகிறோம். இதுவரை பார்த்திராத மிகப் பெரிய பதிலடியை பயங்கரவாதிகள் சந்திக்க உள்ளனர். தங்களுடைய செயலுக்கான மிகப் பெரும் விலையை அவர்கள் கொடுக்க நேரிடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிணைக்கைதி

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில், இஸ்ரேலின் ஷா – ஹர் ஹாநிகவ் மாகாண மேயர் ஹபீர் லிப்ஸ்டெயின் பலியானார்.

இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

இந்தியர்களுக்கு எச்சரிக்கை

இஸ்ரேலில் உள்ள இந்திய துாதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பாதுகாப்பான இடங்களில் வசிக்கவும். தேவைப்படாத நிலையில் வெளியே செல்வதை தவிர்க்கவும். உள்ளூர் நிர்வாகம் பிறப்பிக்கும் உத்தரவுகளை ஏற்று நடந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இஸ்ரேலில் மாணவர்கள், ஐ.டி., ஊழியர்கள் உட்பட 18,000 இந்தியர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதலில் மேயர் பலி

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில், இஸ்ரேலின் ஷா – ஹர் ஹாநிகவ் மாகாண மேயர் ஹபீர் லிப்ஸ்டெயின் பலியானார். இதையடுத்து, துணை மேயராக உள்ள யோசி கெரன், மாகாண மேயர் பொறுப்பை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு காரணம் என்ன?

ஜெருசலேமின் டெம்பிள் மவுன்ட் என்ற பகுதி, யூதர்கள் மற்றும் அரேபியர்களுக்கு மிகவும் முக்கியமான பகுதியாகும். இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலுக்கு முக்கிய காரணம், இந்த வழிபாட்டு பகுதிகளாகும். இங்குள்ள, அல் – அக்சா என்ற மசூதி தொடர்பாக சமீபத்தில் பெரும் சர்ச்சை எழுந்தது. இந்தப் பகுதியில் யூதர்களும், முஸ்லிம் அல்லாத மற்றவர்களும் குறிப்பிட்ட நேரத்தில் செல்வதற்கு அனுமதி உள்ளது. ஆனால், பிரார்த்தனை உள்ளிட்டவற்றில் ஈடுபட முடியாது.இந்நிலையில், இந்த மசூதி சமீபத்தில் அவமதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது; இது, பாலஸ்தீனம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரேபியர்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதையடுத்தே, ‘ஆப்பரேஷன் அல் – அக்சா பிளட்’ என்ற பெயரில், ஹமாஸ் பயங்கரவாதிகள் இந்த தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், காசா மலைக்குன்று மற்றும் பாலஸ்தீனம் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு பதிலடியாக, இந்த தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசு அறிவிப்பு

இஸ்ரேலில் வசிக்கும் தமிழர்கள், தமிழக அரசை தொடர்பு கொள்ள, தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.அங்குள்ள தமிழர்கள் அயலகத் தமிழர் நலத் துறையை தொடர்பு கொண்டால், இந்திய துாதரகம் வழியே, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அயலகத் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.அயலகத் தமிழர் நலத்துறையை, 8760248625, 9940256444, 96000 23645 ஆகிய மொபைல் எண்களிலும், [email protected], [email protected] – மெயில் முகவரி வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.