Motivation Story: பாஸ்டன் மாரத்தானில் கலந்துகொண்ட முதல் பெண் – பாபி கிப்! ஒரு சாதனைச் சரித்திரம்!

`நிலவுக்கு குறிவையுங்கள். ஒருவேளை நீங்கள் அதைத் தவறவிட்டால், ஒரு நட்சத்திரத்தையாவது அடைய முடியும்.’ – அமெரிக்க எழுத்தாளர் டபிள்யூ. கிளமென்ட் ஸ்டோன் (W. Clement Stone).

அமெரிக்காவின் சான் டியாகோ நகரம். ஷாப்பிங் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பியிருந்தார் அந்தப் பெண். வாசலில் வைத்திருந்த மெயில் பாக்ஸில் ஒரு கடிதம். எடுத்துப் பார்த்தார். பாஸ்டன் மாரத்தான் நிர்வாகத்திடமிருந்து வந்திருந்தது. ஆர்வத்துடன் கடிதத்தைப் பிரித்தார்.  அந்த ஆண்டு பாஸ்டன் மாரத்தானில் கலந்துகொள்வதற்காக விண்ணப்பித்திருந்தார். போட்டியில் கலந்துகொள்வதற்கான அவருடைய எண் என்னவாக இருக்கும் என்று ஆவலோடு படித்தார். போட்டி இயக்குநர் வில்லியம் தாமஸ் க்ளூனி என்பவர் எழுதியிருந்தார்.

Running

`அன்புடையீர்! உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. இது ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் போட்டி. பெண்களுக்கு அனுமதியில்லை. மாரத்தானில் அவ்வளவு தூரம் பெண்களால் ஓட முடியாது. உடல்ரீதியாக அது அவர்களுக்குச் சாத்தியமில்லை. உங்களுக்கான மருத்துவப் பொறுப்பையெல்லாம் எங்களால் ஏற்க முடியாது…’ என்று குறிப்பிட்டிருந்தது. அந்தப் பெண்ணின் பெயர் பாபி கிப் (Bobbi Gibb). பாஸ்டன் மாரத்தானில் பங்கேற்ற முதல் பெண்.

கடிதத்தைப் படித்ததும் துவண்டுபோய்விடவில்லை கிப். முதல் காரியமாக அதைக் கசக்கித் தூர எறிந்தார். தன் ஆத்திரத்தையும் கோபத்தையும் தீர்த்துக்கொள்ள கடற்கரையில் பல கிலோமீட்டர்களுக்கு வேகமாக ஓடினார். பிறகு, கடற்கரை மணல்வெளியில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார். ஒரு முடிவெடுத்தார். `ஒரு பெண் ஓடக் கூடாது. ஓடுவதற்குப் பெண் தகுதியில்லாதவள் என்றெல்லாம் முடிவெடுக்க இவர்கள் யார்… நான் இந்தப் போட்டியில் ஓடியே தீருவேன்.’

`வாழ்க்கையில் உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் நம்பிக்கை மட்டுமே. பிறகென்ன… வெற்றி நிச்சயம்’ – அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன்.

அவருடைய இயற்பெயர் ராபெர்ட்டா லூயி கிப் (Roberta Louise Gibb). சுருக்கமாக பாபி கிப். 1942-ம் ஆண்டு பிறந்தார். அப்பா, டஃப்ட்ஸ் யூனிவர்சிட்டியில் கெமிஸ்ட்ரி புரொபசர். அந்தப் பெண்ணுக்கு, அதாவது கிப்புக்கு சின்ன வயதிலிருந்தே ஓட்டம் என்றால் உயிர். “கிப்… சைக்கிள் எடுத்துட்டுப்போய் கடையில ஒரு பிரெட் வாங்கிட்டு வாயேன்’’ என்று அம்மா சொல்வார். “வேணாம்மா. ஓடிப்போயிட்டு, ஓடி வந்துடுறேன்’’ என்பார். சிட்டாகப் பறப்பார். அது என்னமோ ஓடிக்கொண்டேயிருப்பதில் அந்தப் பெண்ணுக்கு அப்படி ஓர் ஆசை. இனி முடியாது என்கிறபோதுதான் ஓட்டத்தை நிறுத்துவார். மாரத்தான் ஓட்டம் என்பது பல கிலோமீட்டர் தூரம் ஓடவேண்டிய போட்டி. முதல் இடம், இரண்டாம் இடம் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். தூரத்தை ஓடிக் கடந்துவிட வேண்டும் என்பதுதான் முக்கியமான விதி. கிப்பின் அம்மா தயங்கினார். அவருக்குத் தன் மகளை, ஆண்களோடு ஆண்களாக ஓடவிடுவதில் விருப்பமில்லை.

பாபி கிப்

“வேணாம் கண்ணு. பொம்பளைப் பிள்ளைங்களால அவ்வளவு தூரமெல்லாம் ஓட முடியாதும்மா. எப்பிடியும் 24, 25 மைல் ஓடணுங்கறாங்க. உன்னால முடியுமான்னு தெரியலையேம்மா.’’

“அம்மா… பொண்ணுங்களால இதெல்லாம் முடியாதுன்னு ஆண்கள்தாம்மா சில கட்டுப்பாடுகளை விதிச்சு வெச்சுருக்காங்க. அதெல்லாம் மூடத்தனம்மா. பெண்களால முடியும்… எதையும் செய்ய முடியும். நான் ஓடிக் காட்டுறேம்மா. என்னை நம்பும்மா.’’

அரைமனதோடு ஒப்புக்கொண்டார் அம்மா.

`உங்களிடம் தன்னம்பிக்கை மட்டும் இல்லாவிட்டால், வாழ்க்கைப் பந்தயத்தில் இரண்டு முறை தோற்கடிக்கப்படுவீர்கள்.’’ – ஜமைக்காவைச் சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர் மார்கஸ் கார்வி (Marcus Garvey)

1966-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 16-ம் தேதி. அன்றைய தினம் பாபி கிப்புக்கு மட்டுமல்ல… மாரத்தான் குறித்த முன்முடிவுகளோடு இருந்த ஆண்கள் பலருக்கே மறக்க முடியாத தினம். பாஸ்டன் மாரத்தான் போட்டி நடந்த தினம். அன்றைக்கு அருகிலிருந்த ஹாப்கின்டன் (Hopkinton) நகரில் 40 நிமிடங்களுக்கு ஓடி முதலில் வார்ம்-அப் செய்துகொண்டார் கிப். தன்னுடைய சகோதரனின் பெர்முடா ஷார்ட்ஸையும், ஒரு பனியனையும் அணிந்துகொண்டார். போட்டி ஆரம்பமாகும் இடத்தில் ஓர் மறைவாக நின்றுகொண்டார். மாரத்தான் போட்டி ஆரம்பித்தது. சில நிமிடங்கள் கழித்து, கூட்டத்தோடு கூட்டமாக அவரும் ஓட ஆரம்பித்தார். மாறுவேடத்தில் அவர் இருந்தாலும், உடன் ஓடிவந்த ஆண்கள் அவரைப் பெண் என்று அடையாளம் கண்டுகொண்டார்கள். “ஏய்… அது ஒரு பொண்ணுப்பா… பொண்ணு…’’ என்ற குரல் அவருக்குப் பின்னே கேட்க ஆரம்பித்தது. “அமர்க்களம் போ… ஆம்பளைங்க கலந்துக்குற போட்டியில ஒரு பொண்ணா… பிரமாதம்’’ என்றார் ஒருவர்.

பாபி கிப்

அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, யாருமே அவரை அந்த மாரத்தான் பந்தயத்திலிருந்து வெளியே போகச் சொல்லவில்லை. கூடவே, அந்த மாரத்தானில் ஒரு பெண் கலந்துகொண்டிருக்கிறார் என்கிற செய்தி தீயாகப் பரவ ஆரம்பித்தது. அவர்களில் ஒருவர் சொன்னார்… “உன்னை நாங்க வெளியே அனுப்பிட மாட்டோம்மா… இது ஃப்ரீ ரோடு. ஜாலியா ஓடு.’’

கிப் ஓடினார். “அதைத்தான் நான் செய்ய விரும்பினேன். பாலினத்துக்கு எதிரான அந்தச் சண்டையை நான் முடிவுக்குக் கொண்டுவர விரும்பினேன். ஆண்களும் பெண்களும் வாழ்நாள் முழுக்கப் பங்கிட்டுக்கொள்ள முடியும் என்பதைக் காட்ட விரும்பினேன்’’ என்று பின்னாளில் ஒரு போட்டியில் குறிப்பிடுகிறார் கிப். மூன்று மணி நேரம், 21 நிமிடங்கள், 40 விநாடிகளில் இலக்கை அடைந்தார் கிப். அன்றைய போட்டியில் மூன்றில் ஒரு பங்கு ஆண்கள் இலக்கை எட்டியிருந்தார்கள். அவர்களில் கிப்பும் அடக்கம்.

கிப் கலந்துகொண்ட அந்த ரேஸுக்குப் பிறகு பெண்களும் பாஸ்டன் மாரத்தானில் கலந்துகொள்ள ஆரம்பித்தார்கள். 1972-ம் ஆண்டு ஒன்பது பெண்கள் கலந்துகொண்டார்கள். 2017-ம் ஆண்டு அதே மாரத்தானில் பெண்களின் எண்ணிக்கை 13,698. கிட்டத்தட்ட மாரத்தானில் கலந்துகொண்டவர்களில் 45 சதவிகிதத்துக்கும் அதிகம். இதையெல்லாம் சாத்தியப்படுத்தியவர் ஒரே ஒரு பெண்… பாபி கிப்! தன்னுடைய 80-வது வயதிலும் பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார் கிப். முடிந்தவரை கடற்கரையில் ஓடுகிறார். அவர் குறித்த யூடியூப் படங்கள் அற்புதம்.

இப்போதும் கிப் சொல்வது ஒன்றே ஒன்றுதான்… “நான் எப்போது ஓட வேண்டும் என்று விரும்புகிறேனோ, அப்போதெல்லாம் ஓடுகிறேன். கடற்கறையில் ஓடும்போது எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்… “வாவ்… நான் உயிரோடு இருக்கிறேன்… நான் உயிரோடு இருக்கிறேன்…’’

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.