இடாவா, புதுடில்லியிலிருந்து, பீஹாரின் சாஹர்சா செல்லும் வைஷாலி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை உத்தர பிரதேச மாநிலம், இடாவா மாவட்டத்தை கடந்து கொண்டிருந்தது.
அப்போது, அந்த ரயிலின் ஒரு பெட்டியிலிருந்து புகை வெளியேறியதால், துாங்கிக் கொண்டிருந்த பயணியர் மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திய பயணியர், ரயில்வே கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு உதவி கோரினர்.
ரயில்வே போலீசார் தகவலின் அடிப்படையில், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ரயிலின் எஸ் 6 பெட்டியில் தீ பற்றி புகை கசிவது கண்டுபிடிக்கப்பட்டு, தீ உடனே அணைக்கப்பட்டது. இந்த விபத்தில், 21 பயணியர் காயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக நேற்று முன் தினம் மாலை, இடாவா மாவட்டத்தில் புதுடில்லியிலிருந்து தர்பங்கா செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது.
இதில் மூன்று பெட்டிகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. எட்டு பயணியர் காயமடைந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் பீஹாரின் சமஸ்டிபூர் ரயில் நிலையத்திற்கு வெளியே சிக்னலுக்காக நிறுத்தப்பட்டிருந்த பாகல்பூர் தர்பங்கா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில், நேற்று முன் தினம் வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் ஒரு பெண் உட்பட நான்கு பயணியர் காயமடைந்தனர். ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், பட்டாசு தயாரிக்க எடுத்துச் செல்லப்பட்ட வெடி மருந்துகள் தீப்பற்றி வெடித்தது தெரிய வந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement