ம.பி.யில் 230, சத்தீஸ்கரில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது: வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. சத்தீஸ்கரில் 70 தொகுதிகளில் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

இதனையொட்டி பிரதமர் மோடி முதல் முறை வாக்காளர்களுக்கு வாழ்த்தும் வாக்குப்பதிவில் வரலாறு படைக்குமாறும் வாக்காளர்களுக்கு வேண்டியுள்ளார்.

மத்தியப் பிரதேசம் தேர்தல் தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “இன்று மத்தியப் பிரதேசத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் அனைவரும் உற்சாகமாக வாக்களித்து இந்த ஜனநாயகத் திருவிழாவின் அழகைக் கூட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன். மாநிலத்தின் முதல் முறை வாக்காளர்களுக்கு எனது வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் சத்தீஸ்கர் தேர்தல் தொடர்பாக, “இன்று இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்கள் தங்கள் கடமையை ஆற்ற அழைக்கிறேன். ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்துக்கு முக்கியமானது” என்று பதிவிட்டுள்ளார்.

பாஜக vs காங்கிரஸ் மத்திய பிரதேசத்தில் பாஜக – காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 110 இடங்களையும், காங்கிரஸ் 109 இடங்களையும் கைப்பற்றியது. இங்கு மீண்டும் ஆட்சி அமைக்க,முதல்வர் சிவராஜ் சவுகான் தலைமையிலான பாஜக அரசு தீவிர முயற்சி எடுத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் சுமார் 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சி களம் இறங்கியுள்ளது.

வெற்றியைத் தீர்மானிக்கும் 70 தொகுதிகள்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த 7-ம் தேதி, நக்சல் பாதிப்பு உள்ள 20 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் 78 சதவீத வாக்குகள் பதிவாகின.

.

இந்நிலையில், இதர 70 தொகுதிகளுக்கு இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில் பிலாஸ்பூர் மண்டலத்தில் 25 தொகுதிகள் உள்ளன. இங்கிருந்து சுமார் 3-ல்ஒரு பங்கு எம்எல்ஏக்கள் தேர்வுசெய்யப்படுவதால், பிலாஸ்பூர்மண்டலம் பாஜக, காங்கிரஸுக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த முறை, இப்பகுதியின் முடிவுகள்தான் வெற்றியை தீர்மானிக்கும் என கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.