காசாவில் மருத்துவமனைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் தொடுக்கவில்லை: ஹெர்ஜாக் பேட்டி

புதுடெல்லி,

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் 11 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.

இதுதவிர, இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டு உள்ளனர். அவர்களை மீட்கும் தீவிர பணியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது. தரைவழி தாக்குதலையும் முன்னெடுத்து வருகிறது.

இதில், வடக்கு காசா பகுதியில் அமைந்த பெரிய மருத்துவமனையாக உள்ள அல்-ஷிபா மருத்துவமனையையும் இலக்காக கொண்டு தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இதனால், அந்த மருத்துவமனையில் மருத்துவ சேவை வழங்கப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

7 குழந்தைகள் மற்றும் 27 நோயாளிகள் வரை உயிரிழந்து விட்டனர் என ஹமாஸ் அமைப்புக்கான துணை சுகாதார மந்திரி யூசுப் அபு ரிஷ் கூறினார்.

இந்நிலையில், இஸ்ரேல் அதிபர் ஈசாக் ஹெர்ஜாக் இன்று செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியின்போது, காசாவில் உள்ள மருத்துவமனைகளை இஸ்ரேல் இலக்காக கொண்டு செயல்படவில்லை.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், மருத்துவமனைகளில் இருந்தபடி கட்டுப்பாட்டு மையங்களை அமைத்து, இஸ்ரேல் குடிமக்களை துப்பாக்கியால் சுட்டு, படுகொலை செய்து வருகின்றனர் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் ராக்கெட்டுகளை வைத்திருக்கின்றனர். இஸ்ரேல், தன்னுடைய நாட்டு மக்களை பாதுகாக்கும் உரிமையை வைத்திருக்கிறது.

அதனுடன், அதன் குடிமக்களை சொந்த நாட்டுக்கு திரும்ப அழைத்து வரும் இலக்கையும் கொண்டுள்ளது. பிடித்து செல்லப்பட்ட பணய கைதிகளை மீட்டு, பயங்கரவாத அமைப்பு மீண்டும் தாக்குதலை தொடர முடியாத வகையில் உறுதி செய்யவும் வேண்டி உள்ளது என கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.