புதுடில்லி, மேற்கு ஆசிய நாடான ஏமனில், அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரை கொன்ற வழக்கில், கேரள நர்சுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியா என்பவர், ஏமனில் செவிலியராக பணியாற்றி வந்தார்.
இவரது பாஸ்போர்ட்டை, அந்நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவர் கையகப்படுத்தி இருந்தார்.
தலால் அப்தோ மஹ்திக்கு தெரியாமல் பாஸ்போர்ட்டை மீட்க, அவருக்கு நிமிஷா பிரியா, மயக்க ஊசி செலுத்தினார்.இதில் அளவுக்கு அதிகமாக மருந்து செலுத்தப்பட்டதால், எதிர்பாராதவிதமாக அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிமிஷா பிரியாவுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இதன்படி, 2017 முதல் அவர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இதை எதிர்த்து, ஏமன் உச்ச நீதிமன்றத்தில் நிமிஷா பிரியா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
சமீபத்தில் இதை விசாரித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம், நிமிஷா பிரியாவுக்கு விதித்த மரண தண்டனையை உறுதி செய்தது. இதற்கிடையே, ஏமனுக்குச் செல்ல அனுமதி அளிக்கும்படி, டில்லி உயர் நீதிமன்றத்தில், நிமிஷா பிரியாவின் தாய் இந்தாண்டு துவக்கத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஏமனில் உள்நாட்டுப் போர் நடப்பதால், இந்தியர்கள் அங்கு செல்ல, 2017ல் மத்திய அரசு தடை விதித்தது. சமீபத்தில், டில்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நிமிஷா பிரியா தாய் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘ஏமன் நாட்டு சட்டத்தின்படி உயிரிழந்தவர் குடும்பத்தினர், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து இழப்பீடு ஏற்றுக் கொண்டால், தண்டனையில் இருந்து விலக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
‘எனவே, அந்நாட்டுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்’ என்றார். இதை கேட்ட நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்