சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த ‘மிதிலி’ புயல், வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, 17-ம் தேதி மாலை வங்கதேச கடற்கரை அருகில் கேப்புபாராவில் கரையை கடந்தது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்காரைக்கால் பகுதிகளில் 19-ம் தேதி ஒருசில இடங்களிலும், 20, 21 தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், 22 முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
19-ம் தேதி புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரிமாவட்டங்களிலும், 20-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டாமாவட்டங்கள், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்,புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 21-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
22-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன்கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
18-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆகிய இடங்களில் தலா 7 செமீ, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் 5 செமீ, காரைக்காலில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.