காசா: காசாவில், அல் ஷிபா மருத்துவமனையை இஸ்ரேல் படைகள் சுற்றி வளைத்துள்ள நிலையில், அங்கு பயங்கரவாதிகள் பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை தேடும் வேட்டை தீவிரமடைந்துள்ளது.
இதற்கிடையே, ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால், கடந்த இரு நாட்களில் மட்டும், புதிதாக பிறந்த மூன்று குழந்தைகள் மற்றும் 24 நோயாளிகள் உயிரிழந்தனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும், கடந்த அக்., 7ம் தேதி முதல் மோதல் நடக்கிறது.
இதில், இஸ்ரேலில் 1,400 பேரும், காசாவில் குழந்தைகள், பெண்கள் உட்பட, 10,000க்கும் மேற்பட்டோரும் கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் பல பகுதிகளில் வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், தற்போது தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தி உள்ளது.
காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டமைத்துள்ள சுரங்கப்பாதை வலையமைப்பை அழிக்கும் முயற்சியில் இஸ்ரேல் படைகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், காசாவில் உள்ள அல் ஷிபா மருத்துவமனையில், இஸ்ரேல் படைகள் நேற்றும் மூன்றாவது நாளாக தொடர் சோதனையில் ஈடுபட்டன.
இந்த மருத்துவமனையை, ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டளை மையமாக பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின்படி, இஸ்ரேல் படைகள் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளன.
ஸ்கேன் மையம் உள்ளிட்டவற்றில் பயங்கரவாதிகள் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அங்கு வேறு எங்காவது ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என இஸ்ரேல் ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.
காசாவின் வடக்கு பகுதியில் தாக்குதலை நடத்திய இஸ்ரேல், தற்போது தெற்கு பகுதியில் தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது. இதற்காக, தெற்கு பகுதியில் உள்ள மக்களை இடம் பெயரும்படி அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையே, இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, புதிதாக பிறந்த மூன்று குழந்தைகள் மற்றும் வெவ்வேறு உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட 24 நோயாளிகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால், கடந்த இரு நாட்களில்உயிரிழந்து உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்