மன்சூரலிகான் ஆபாச பேச்சு : த்ரிஷா கடும் கண்டனம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். அப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மன்சூரலிகானும் நடித்திருந்தார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்தப் படம் குறித்து பேசும் போது மன்சூரலிகான், “எனக்கும் ரொம்ப ஆசையா இருந்துச்சு. ஆஹா, த்ரிஷாவோட நடிக்கிறமா… நிச்சயமா பெட்ரூம் சீன்லாம் இருக்கும். குஷ்புவை தூக்கி கட்டில்ல போட்ட மாதிரி, ரோஜாவை போட்ட மாதிரி போடலாம். 150 படத்துல நாம பண்ணாத 'ரேப்' ஆஆஆ…, நாம பண்ணாத அட்டூழியமா… வில்லனையே போட மாட்டேங்கறாங்கப்பா… த்ரிஷாவை, அப்படியே சஞ்சீவி மலைய அனுமார் கொண்டு போன மாதிரி… வெள்ளை வெளேன்னு பஞ்சு மாதிரி இருக்கும் காஷ்மீர்… அவங்க பாதம் தரையில படாத மாதிரி கொண்டு போயிட்டு அப்படியே கொண்டு போயிடுறாங்க, கண்ணுலயே காட்ட மாட்றாங்க,” என ஆபாசமாக பேசியிருந்தார்.

இந்த பேட்டியை அவர் கொடுத்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும், யாரும் இதை கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று இந்த வீடியோ குறித்து த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்து பேசிய பிறகுதான் அவர் அப்படி பேசியிருப்பதும் அதிகம் தெரிய வந்தது.

மன்சூரலிகான் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து, “சமீபத்தில் மன்சூரலிகான் என்னைப் பற்றி கேவலமாக பேசிய ஒரு வீடியோ என் கவனத்திற்கு வந்தது. இதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். இது பாலியல், அவமரியாதை, பெண் வெறுப்பு மற்றும் மோசமான ரசனையாக நான் பார்க்கிறேன். அவரைப் போன்ற பரிதாபமான ஒருவருடன் திரையைப் பகிர்ந்து கொள்ளாததற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். எனது திரையுலக வாழ்க்கையில் இனி ஒருபோதும் அவருடன் நடிக்க மாட்டேன். இவரைப் போன்றவர்கள் மனித குலத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள்,” என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

த்ரிஷாவின் டுவீட்டைப் பகிர்ந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், “நாங்கள் அனைவரும் ஒரு குழுவாகப் பணியாற்றியதால் மன்சூரலிகான் கூறிய பெண் வெறுப்புகளைக் கேட்டு மனமுடைந்து கோபமடைந்துள்ளேன். எந்தத் துறையிலும் பெண்கள், சக கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இந்த நடத்தையை நான் முற்றிலும் கண்டிக்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

த்ரிஷாவுக்கு ஆதரவாகவும், மன்சூரலிகானைக் கண்டித்தும் பல சினிமா பிரபலங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள். மன்சூரலிகான் அவரது பேச்சில் குறிப்பிட்டுள்ள குஷ்பு, ரோஜா ஆகியோர் இது குறித்து இன்னும் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.