புதுடெல்லி: இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் இறுதிப் போட்டி பரபரப்பு தேசம் முழுவதும் தொற்றிக் கொண்டுள்ள நிலையில் பாஜக ”நாங்கள் உங்கள் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறோம் டீம் இந்தியா” என்று எக்ஸ் தளத்தில் கருத்திட அதனை வைத்து சிக்ஸர் விளாசியுள்ளது காங்கிரஸ்.
அந்த ட்வீட்டை மேற்கோள் காட்டியுள்ள காங்கிரஸ் அதற்கு ”உண்மைதான், வெற்றி பெறுக INDIA” என்று இண்டியா கூட்டணி பொருள்படும்படி ட்வீட் செய்துள்ளது.
இந்த வார்த்தை விளையாட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் தலைமையில் இணைந்துள்ள எதிரணிக்கு இண்டியா கூட்டணி மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. அதனாலேயே பாஜகவினர் அந்தக் கூட்டணியை இண்டியா கூட்டணி எனக் குறிப்பிடாமல் ’இண்டி’ கூட்டணி எனக் கூறி வருகின்றனனர். இந்தியாவின் பெயரையே பாரத் என மாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது நினைவுகூரத்தக்கது. இந்தச் சூழலில் இன்று பாஜக டீம் இந்தியாவை வாழ்த்திப் பதிவிட்ட ட்வீட்டை தனக்கு சாதகமாக்கி பதிவிட்டு கவனம் ஈர்த்துள்ளது காங்கிரஸ்.