விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தங்கபாண்டியன். இவரின் மகன் ராமர், தன்னை தாக்கியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ராஜபாளையத்தை சேர்ந்த வாட்ச்மேன் முத்துசாமி என்பவர் புகார் மனு அளித்தார். இந்த பரபரப்பு மனு குறித்து முத்துசாமியிடம் கேட்டபோது, “ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கு சொந்தமான கார்மென்ட்ஸ் நிறுவனம் தளவாய்புரம் அருகே செயல்பட்டு வருகிறது. இதில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அங்க்கு நான் வாட்ச்மேனாக பணியாற்றி வந்தேன். அப்போது சம்பள பாக்கி தொடர்பாக எனக்கும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மகன் ராமருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.
இதில் எம்.எல்.ஏ.மகன் ராமர் ஆத்திரமடைந்து, என்னை இரண்டு கன்னத்திலும் மாறி மாறி அடித்து, கீழே தள்ளி உதைத்தார். இந்த தாக்குதலில் எனக்கு காது சவ்வு மற்றும் நரம்பில் பாதிப்பு ஏற்பட்டதில், காது கேளாமல் போனது. மேலும் அடித்து கீழே தள்ளியதில் வயது மூப்பின் காரணமாக இடுப்பு எலும்பில் பலத்த காயம்பட்டு இன்றுவரை என்னால் சரிவர நடக்க முடியாத நிலையில் உள்ளேன். ராமர் என்னை தாக்கியது தொடர்பாக அப்போது சமாதானம் பேசிய தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., ‘புகார் எதுவும் கொடுக்க வேண்டாம், உனக்கு ஆகும் மருத்துவ செலவுகளை நானே ஏற்றுக்கொள்கிறேன். நஷ்ட ஈடாக 5 லட்ச ரூபாய் தருகிறேன்’ என வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வார்த்தையை நம்பி நானும் புகார் எதுவும் கொடுக்கவில்லை.

முதற்கட்டமாக 25,000 ரூபாயை கொடுத்தவர்கள், அதன் பின் எந்த பணமும் எனக்கு தரவில்லை. பின்பு மீண்டும் அவர்களிடம் சென்று முறையிட்டதன் பேரில் இரண்டாவது தவணையாக 20,000 ரூபாய் கொடுத்துவிட்டு, மீதி தொகையை கொஞ்ச நாளில் தருகிறேன் என கூறினர். ஆனால் ஒன்றரை வருடம் கடந்த நிலையிலும், நஷ்ட ஈடாக எனக்கு தருவதாக சொன்ன ஐந்து லட்சம் ரூபாயை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ தரப்பினர் தராமல் ஏமாற்றி வருகின்றனர். இது குறித்து நானும் பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துவிட்டேன். ஆனாலும் காவல்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எனது புகாரை தட்டிக்கழித்து வருகிறார்கள்.
வயோதிகம் காரணமாக உதவிக்கு ஆள் இன்றி சரியான வேலையும் இன்றி மிகவும் கடுமையான பொருளாதார சூழ்நிலையில் பாதிக்கப்பட்டிருக்கும் எனக்கு, தங்கபாண்டியன் எம்.எல்.ஏ தருவதாக சொன்ன நஷ்ட ஈடு மிகவும் உதவிகரமாக இருக்கும். ஆகவே இவ்வளவு காலமும் என்னை ஏமாற்றி வந்த எம்.எல்.ஏ தங்கபாண்டியன் தரப்பினர் மீது உரிய விசாரணை நடத்தி, எனக்கு சேர வேண்டிய நஷ்ட ஈடு பணத்தை பெற்று தர வேண்டும்” என்றார்.
புகார் குறித்து தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.விடம் பேசினோம். அப்போது அவர், “அவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே வேலையை விட்டு சென்றுவிட்டார். அதன் பின்பு, எங்கள் மீது இதுபோன்ற புகார்கள் கொடுப்பதும், விசாரிப்பதும் தொடர்கதையாக நடந்துவருகிறது. முத்துசாமியின் குடும்ப வறுமை காரணமாக என்னிடம் உதவிக்கேட்டு, பல முறை நான் அவருக்கு உதவியிருக்கிறேன். உதவியதை கருத்தில் எடுத்துக்கொண்டு, பணம் பறிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு முத்துசாமி செயல்படுகிறார். கடைசியாக அவருக்கு பணம் கொடுத்து உதவிய சூழலிலும்கூட, இனி எந்த முறையீட்டுக்கும் வரமாட்டேன் என போலீஸ் முன்னிலையில் உறுதிமொழி எழுதிய தாளை படித்து பார்த்து கையெழுத்திட்டு விட்டுத்தான் பணம் பெற்றுச்சென்றார். இதற்கான ஆதாரம் உள்ளது. அப்படியிருக்கையில், தற்போது மீண்டும் புகார் கொடுத்திருப்பது எனக்கு வருத்தமளிக்கிறது” என்றார்.