புதுடெல்லி: உத்தர பிரதேச மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பி. அப்சல் அன்சாரியின் தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 1996-ல் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த நந்த் கிஷோரை கடத்தியது, 2005-ல் பாஜக எம்.எல்.ஏ. கிருஷ்ணானந்த் ராய் கொலை செய்யப்பட்டது ஆகிய வழக்குகளின் அடிப்படையில் அப்சல் அன்சாரி மீதும் அவரது சகோதரர் முக்தார் அன்சாரி மீதும் 2007-ம் ஆண்டு குண்டர் சட்ட வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்குத் தொடர்பான விசாரணை காசிபூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், இந்த வழக்கில் அப்சல் அன்சாரிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. முக்தார் அன்சாரிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
அப்சல் அன்சாரி காசிபூர் தொகுதி எம்.பி.யாக பதவி வகித்து வந்தார். இந்தத் தீர்ப்பையடுத்து அவர் எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், தன் மீதான தண்டனையை நிறுத்தி வைக்கும்படி அவர் அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த ஜூலை மாதம், அவரது மனுவை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம், அவர் மீதான தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்தது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில், இவ்வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சில நிபந்தனைகளை முன்வைத்து அவர் மீதான தண்டனையை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. நீதிபதிகள் சூர்ய காந்த் திபங்கர் தத்தா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதன் மூலம் அவரது தகுதிநீக்கம் ரத்தாகிறது. எனினும், மக்களவையில் அவர் வாக்களிக்க அனுமதியில்லை என்றும் மக்களவை கூட்டங்களில் கலந்துகொள்ள மட்டும் அனுமதி வழங்கப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அவரது தண்டனை தொடர்பாக முடிவு எடுக்க அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு 2024-ம் ஆண்டு ஜூலை 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.