துபாய்: குவைத் நாட்டு மன்னர் ஷேக் நவாப் அல் அஹமது அல் சபா, 86, நேற்று காலமானார்.
மேற்கு ஆசிய நாடான குவைத்தின் மன்னராக இருந்தவர் ஷேக் நவாப் அல் அஹமது அல் சபா.
கடந்த மாதம் உடல்நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அவர் உயிரிழந்ததாக அந்நாட்டு அமைச்சர் ஷேக் முஹமது அப்துல்லா அல் சபா அறிவித்தார்.
இது தொடர்பான அறிவிப்பு, அந்நாட்டு அரசு தொலைக்காட்சி வாயிலாக தெரிவிக்கப்பட்டது. அவர் இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த 2006 முதல், குவைத் மன்னராக இருந்து வந்த தன் சகோதரர் ஷேக் சபா அல் அகமது அல் சபா, 2020ல் இறந்ததை அடுத்து, புதிய மன்னராக ஷேக் நவாப் அல் அஹமது அல் சபா பதவியேற்றார்.
ராஜ தந்திரத்துக்கும், சமாதானத்துக்கும் புகழ் பெற்ற அவரது ஆட்சி மக்களிடையே வரவேற்பை பெற்றது.
அவரது மறைவை அடுத்து, குவைத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அந்நாட்டு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மன்னராக ஷேக் நவாப் அல் அஹமது அல் சபாவின் சகோதரர் ஷேக் மெஷல் அல் அஹமது அல் ஜபர் பதவியேற்க உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement