மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப்போட்ட நிலையில் வழிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களை மழை பதம்பார்த்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று இரவு வரை நீடித்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக மயிலாடியில் 303.2 மி.மீ மழை பதிவானது. பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளவை நெருங்கும் நிலையில் அந்த அணைகளில் இருந்து 4000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த நீர் வெளியேறும் தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி கலெக்டர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.

மக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்தின் கரையோரம் வேடிக்கைப்பார்க்கவோ செல்லவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றின் கரை ஓரத்தில் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருந்து வருகின்றனர். மழை காரணமாக நகர்கோவில் பறக்கின்கால், ஊட்டுவாழ்மடம், மீனாட்சி கார்டன், அஞ்சுகிராமம் காவல்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புக்களுக்குள் தண்ணீர் புகுந்தது. அவர்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் படகுகள் மற்றும் ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் மீட்டனர். வெள்ளம் புகுந்த பகுதிகளில் உள்ள மக்கள் 7 முகாம்களில் தங்கவைக்கப்படுள்ளனர்.

பாறக்கால் மடம், ஊட்டுவாழ்மடம், மீனாட்சிகார்டன், சக்தி கார்டன் உள்ளிட்ட பகுதிக்ளில் நேற்று இரவு மட்டும் 61 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். பறக்கின்கால், மருங்கூர், பெருமாள்புரம், இரவிபுதூர், நல்லூர், தோவாளை அண்ணாநகர், திருப்பதிசாரம் ஆகிய பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததை அடுத்து மக்கள் முகாம்களில் தஞ்சம்புகுந்தனர். மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 7 முகாம்கள் 169 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நாகார்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பறக்கின்கால், ஊட்டுவாழ்மடம், சக்திகார்டன் ஆகிய பகுதிகள் முன்பு வயல்வெளியாக இருந்தன. பின்னர் அவைகள் பிளாட் போடப்பட்டு குடியிருப்புகளாக மாறின. அந்த பகுதிகளில்தான் அதிக அளவு தண்ணீர் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள 7 முகாம்களில் 194 ஆண்கள், 235 பெண்கள், ஒரு திருநர், 62 குழந்தைகள் உள்ப்பட 492 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் மழைக் காரணமாக 6 குளங்களின் கரைகள் உடைந்துள்ளன. பல குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகின்றன. நேற்று இரவு மழை சற்று குறைந்ததால் பாதிப்பு குறைந்துள்ளது. ஆனாலும் முகாம்கள் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றன. மழைகாரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.