‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் ‘அயலான்’.
ரகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன் பேசிய சில விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “ நாங்கள் அயலான் ஸ்டார்ட் பண்ணும்போது ‘பான் இந்தியா’ என்ற வார்த்தையே எங்களுக்குத் தெரியாது. தமிழ் சினிமாவில் எங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகள், வெற்றிகளை வைத்து நாம் இதுபோன்ற ஒரு படத்தை பண்ண வேண்டும் என்று நினைத்து எடுத்த படம்தான் அயலான். பல போராட்டங்களுக்குப் பிறகு இந்தப் படம் பொங்கல் அன்று வெளியாகிறது. எனக்குப் போட்டியில் நம்பிக்கை இல்லை. எனக்கு அது தேவையும் இல்லை. சிறுவயதில் கார்ட்டூன், ஃபேண்டஸி படங்கள் அதிகம் பார்த்திருக்கிறேன். தமிழில் அந்த மாதிரியான படம் வர வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன்.
இந்தப் படத்தில் நானும் ஒரு அங்கம் ஆனதில் மிக்க மகிழ்ச்சி. அனைத்து பார்வையாளர்களுக்குமானதுதான் இந்தப் படம். என்னை சிலர் சூப்பர் என்று சொல்வார்கள். சிலர் இன்ஸ்பிரேஷன் என்று சொல்வார்கள். சிலர் என்னை திட்டுவார்கள். ஆனால் நான் இதை எல்லாம் எடுத்துக்கொள்ளவே மாட்டேன். என் ஹேட்டர்ஸைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. என்னை பிடித்தவர்களுக்காக நான் எப்போதும்போல் ஓடிக்கொண்டே இருப்பேன்” என்று பேசியிருக்கிறார்.

‘அயலான்’ இசை குறித்து பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், “ அயலான் படத்திற்கு இசையமைக்க நான் நினைத்ததைவிட ஐந்து மடங்கு அதிகமாக வேலை செய்ய வேண்டியிருந்தது. அதற்காக தொடர்ந்து மூன்று மாதங்கள் கடுமையாக உழைத்துள்ளோம்” என்று கூறியிருக்கிறார்.