துமகூரு :அரசு கார் மீது லாரி மோதிய விபத்தில், கர்நாடக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறை அமைச்சராக இருப்பவர், மது பங்காரப்பா, 57. ஷிவமொகா மாவட்டம், சொரப் தொகுதி எம்.எல். ஏ.,வாக இருக்கிறார்.
இவர், நேற்று முன்தினம் இரவு ஷிவமொகாவில் இருந்து பெங்களூருக்கு அரசு காரில் புறப்பட்டார்.
அவருடன், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி உட்பட மூன்று பேர் பயணம் செய்தனர்.
துமகூரு நந்திஹள்ளி கிராம பகுதியில், நள்ளிரவில் கார் சென்றது. அப்போது, அந்த வழியாக குஜராத்தில் இருந்து, பெங்களூருக்கு டைல்ஸ் கற்களை ஏற்றிய ஒரு லாரி வந்தது.
எதிர்பாராதவிதமாக அமைச்சர் சென்ற கார் மீது, லாரி மோதியது. இதில், காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. காரில் இருந்த அமைச்சர் உட்பட நான்கு பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் கியாதசந்திரா போலீசார் விரைந்து சென்றனர். அமைச்சர் உட்பட நான்கு பேரையும், மாற்று காரில் பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement