IND vs SA, Shubman Gill: இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு (IND vs SA) சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் நிறைவடைந்த நிலையில், டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான நேற்றே தென்னாப்பிரிக்கா அணி வெற்றியை உறுதி செய்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி (Team India) 32 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. டீன் எல்கர் ஆட்ட நாயகனாகவும் தேர்வானார்.
டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ள நிலையில், அடுத்த டெஸ்ட் போட்டி ஜன. 3ஆம் தேதி முதல் ஜன. 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடரை இந்தியா இனி வெல்ல முடியாது என்றாலும், அடுத்த டெஸ்ட் போட்டியை வெல்வதன் மூலம் தொடரை இந்தியா சமன் செய்யலாம். அடுத்த போட்டியை டிரா செய்தாலும் தென்னாப்பிரிக்கா தொடரை வென்றுவிடும். மேலும், இந்திய அணியின் இந்த தோல்வி பல்வேறு கேள்விகளையும் எழுப்பி உள்ளது.
ரோஹித் சர்மா, சுப்மான் கில் (Shubman Gill) மீது பேட்டிங்கிலும் ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. ஜடேஜா இடம்பெறாத நிலையில், அஸ்வினுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், சுழலுக்கு சுத்தமாக எடுபடாத இந்த மைதானத்தில் இந்தியா வேறு வழியின்றி ஆடியதாக தெரிகிறது. அந்த வகையில் பல மூத்த வீரர்கள் இந்திய அணியின் தோல்வி குறித்து பேசி வரும் நிலையில், வர்ணனையாளராக இருக்கும் இந்திய அணியின் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக்கும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில்,”சுப்மான் கில் தற்போது இங்கு பெரிய கேள்விக்குறியாக உள்ளார். மக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு அவர் விளையாடவில்லை. 20 டெஸ்டில் விளையாடிய பிறகு உங்களின் சராசரி 30களின் நடுப்பகுதி அல்லது 30களின் தொடக்கத்தில் இருந்தாக வேண்டும் என்பது அவருக்கே தெரியும். அடுத்த டெஸ்ட் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடவில்லை என்றால் டெஸ்ட் போட்டியில் அவரின் இடம் சிக்கலுக்கு உள்ளாகும்.
நாங்கள் தவறவிட்ட ஒரே மிடில் ஆர்டர் பெயர் சர்ஃபராஸ் கான். அவர் இப்போது (தோல்விக்கு பின்) நினைப்பதை விட மிக விரைவில் அவர் அணியில் இடம் பெறுவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதைத் தவிர, உங்களுக்கு வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள். இப்போது மிடில் ஆர்டரில் சுற்றிக் கொண்டிருக்கிறார். ரஜத் படிதார் என்பது மிக மிக வலுவான பெயராக உள்ளது. அதை அவர்கள் விரைவில் பரீசிலனைக்கு எடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.
இந்திய அணி மூத்த வீரர்களான அஜிங்க்யா ரஹானே மற்றும் சேதேஷ்வர் புஜாராவை விட்டு விலகியதாகத் தெரிகிறது, ஆனால் இது அவர்கள் மீண்டும் அணியில் வரமாட்டார்கள் என்று அர்த்தமல்ல. இந்திய அணி இப்படி விளையாடினால், கேப்டனா அல்லது பயிற்சியாளரோ மீண்டும் இதுபோன்ற வெளிநாட்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களையே முயற்சித்து பார்க்கலாம் என யோசிப்பார்கள்” என்றார்.