ஊட்டி: அரசு தாவரவியல் பூங்கா; கண்டு ரசித்த 28 லட்சம் சுற்றுலாப் பயணிகள்!

ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, தமிழகத்தின் உயரமான சிகரமான தொட்டபெட்டா சிகரத்தின் மலையடிவாரத்தில் அமைந்திருக்கிறது.

கடல்மட்டத்திலிருந்து சுமார் 2,000 அடி உயரத்தில் மெக்ஐவர் என்ற ஆங்கிலேயரால் 1847-ம் ஆண்டு இந்தப் பூங்கா உருவாக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் தாவரங்களைத் தருவித்து நடவு செய்துள்ளனர். சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பூங்காவில் 500-க்கும் மேற்பட்ட தாவர இனங்களைப் பராமரித்துவருகின்றனர்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா

நூற்றாண்டைக் கடந்த இந்தப் பூங்கா தற்போது தமிழக அரசின் தோட்டக்கலைத்துறைக் கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது. நீலகிரிக்கு வருகை தரக்கூடிய சுற்றுலாப் பயணிகளின் முதன்மைத் தேர்வாகவும் இந்த அரசுத் தாவரவியல் பூங்கா விளங்கிவருகிறது. கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பயணிகள் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் 28 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தப் பூங்காவைக் கண்டு ரசித்துச் சென்றுள்ளனர்.

பயணிகளின் வருகை குறித்துத் தெரிவித்த பூங்கா அதிகாரிகள், “அரசுத் தாவரவியல் பூங்காவைப் பொறுத்தவரை வழக்கமாகவே சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாகக் காணப்படும். அதிலும் குறிப்பாக, தொடர் விடுமுறைக் காலங்களில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். கடந்த 2022-ம் ஆண்டில் 24 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தப் பூங்காவைக் கண்டு ரசித்துச் சென்றனர்.

அரசுத் தாவரவியல் பூங்கா

2023-ம் ஆண்டு 28 லட்சம் பயணிகளாக உயர்ந்திருக்கிறது. நான்கு லட்சம் பயணிகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. இதன் மூலம் தோட்டக்கலைத் துறைக்கு நல்ல வருவாய் உயர்வும் ஏற்பட்டிருக்கிறது. பூங்காப் பராமரிப்புகளைத் தொடர்ந்து மேம்படுத்தி, பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கத் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.