பெங்களூரு: ஹூப்ளியில் நடந்த கைது நடவடிக்கையை பாஜக அரசியலாக்க முயல்வதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து ஹூப்ளியில் நடந்த கலவரத்தில் தொடர்புடைய நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இது சட்டப்படியான ஒரு நடவடிக்கை. அரசியல் பழிவாங்கலில் நாங்கள் ஈடுபடவில்லை. சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். சமூக விரோத செயல்களுக்கு கர்நாடகாவில் இடமில்லை.
கடந்த காலங்களில் சட்டம் ஒழுங்கை மீறி செயல்பட்டவர்கள், மாநிலத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்து 7 மாதங்கள் ஆகிறது. இன்னமும் பாஜகவால் எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்ய முடியவில்லை. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளதால், ஹூப்ளி விவகாரத்தை அரசியலாக்கப் பார்க்கிறார்கள். ஜனநாயகத்தில் மக்கள் பதில் அளிப்பார்கள்.
பாஜகவைப் போல், மாற்றுக் கட்சியினருக்கு எதிராக பொய் வழக்கு போடுபவர்கள் அல்ல நாங்கள். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, பெங்களூருவிலும், ஹூப்ளியிலும் காங்கிரஸ் கட்சியினர் மீது அவர்கள் போட்ட வழக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்தாலே இது தெரியும். அதைப்போல நாங்கள் செய்யவில்லை; செய்யவும் மாட்டோம்” என தெரிவித்தார்.
பின்னணி: கடந்த 1992-ம் ஆண்டு அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்போது நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர் மீது ஹூப்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 31 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட அந்த வழக்கில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து ஹூப்ளி காவல் நிலையம் முன்பாக பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதேபோல், பெங்களூருவில் பாஜக மாநில தலைவர் விஜயேந்திர பாஸ்கர் ராவ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டங்களில் கலந்து கொண்ட பாஜக தொண்டர்கள், கர்நாடக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி கோஷங்களை எழுப்பினர்.