"அந்த சம்பவத்தால் என் கர்வம் போனது?" – இளையராஜா உரை

‘மால்யதா’ என்கிற ஆண்டாள் திருப்பாவையை விவரிக்கும் ஆங்கில நூல் சென்னையில் வெளியிடப்பட்டது.

இந்த நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில் பேசிய இளையராஜா, ‘தான் இசைஞானி பட்டத்துத் தகுதியானவன் இல்லை’ என்றும் `தற்போது இருக்கும் இசையமைப்பாளர்கள் ஒரு பாடல் பண்ணுவதற்கே ஒரு வருடம் எடுத்துக்கொள்கிறார்கள்’ என்றும் பேசியிருக்கிறார்.

இளையராஜா

இது குறித்து பேசிய அவர், “நான் சிவ பக்தன். இருப்பினும் ‘திருவாசகத்தை ஒலிப்பதிவு செய்ததைப்போல, ‘திவ்யப் பிரபந்த’த்தையும் ஒலிப்பதிவு செய்துவைத்துள்ளேன். சரியான நேரம் வரும்போது அதை வெளியிடுவேன். அப்போது எல்லாம் மாதம் 30 நாளும் எனக்கு வேலை இருக்கும். தினமும் காலையில் ஒரு பாடல், மதியம் ஒரு பாடல் என நாள் முழுவதும் வேலை பார்த்துக்கொண்டே இருப்பேன். காலை 7மணி -1 மணி வரையும் ஒரு கால்ஷீட், பிறகு மதியம் ஒரு கால்ஷீட் என வேலை பார்ப்பேன்.

இப்போது எல்லாம் அது கிடையாது. இரவு முழுவதும் வேலை பார்க்கிறார்கள் ஒரு பாடல் பண்ணுவதற்கு 6 மாதம், ஏன் ஒரு வருடம்கூட எடுத்துக்கொள்கிற இசையமைப்பாளர் எல்லாம் இருக்கிறார்கள். அவர்களை நான் குறை சொல்லவில்லை. அவர்களுக்கு அது வரவில்லை, வந்தால் தானே பண்ண முடியும்.

இளையராஜா

நான் ஒன்றும் கர்நாடக சங்கீதத்தில் எல்லாம் கரைகண்டு வந்தவன் அல்ல. ”இசைஞானி’ என்ற பெயருக்கு நான் தகுதியானவனா’ என்று என்னைக் கேட்டால் அது கேள்விக் குறிதான் என்பேன். மக்கள் என்னை ‘இசைஞானி’ என்று கூப்பிடுகிறார்கள். அவர்களுக்கு என் நமஸ்காரங்கள். எனக்கு எந்த கர்வமும் கிடையாது. அதையெல்லாம் நான் சிறு வயதிலேயே தூக்கி எறிந்துவிட்டேன். சிறுவயதில் நான் நன்றாக ஹார்மோனியம் வாசிக்கிறேன் என்று பிறர் சொல்லும்போது எனக்குக் கொஞ்சம் கர்வம் வந்தது. மக்கள் கைத்தட்டி பாராட்டினார்கள். ஆனால், ‘மக்கள் மெட்டுக்குத்தான் கைத்தட்டுகிறார்கள், அதை வாசிக்கும் என் திறமைக்கு இல்லை’ என்று புரிந்துகொண்டேன். ‘மக்கள் தங்கள் பாட்டுக்குக் கைத்தட்டி அதை ரசிக்கிறார்கள் அவ்வளவுதான்’ என்பதை நன்றாகப் புரிந்துகொண்டேன். அதனால் கர்வத்தில் இருந்து எப்போதோ நான் விடுபட்டுவிட்டேன். எந்த புகழ் மொழியும், பாராட்டுகளும் எனக்கு ஒட்டாது” என்று பேசியுள்ளார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.