காவிரி தந்த “கன்னடத்து பைங்கிளி” கலையுலக ராணி நடிகை பி சரோஜாதேவி: பிறந்தநாள் ஸ்பெஷல்

1. கொஞ்சும் மொழி பேசி, தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் நிலையான இடம் பிடித்து, நித்தம் “அபிநய சரஸ்வதி”யாய் காட்சி தரும் நடிகை பி சரோஜாதேவி அவர்களின் 86வது பிறந்த தினம் இன்று…

2. கர்நாடக மாநிலம் பெங்களுருவில் 1938ம் ஆண்டு ஜனவரி 7 அன்று, பைரப்பா மற்றும் ருத்ரம்மா தம்பதியரின் மகளாகப் பிறந்தார் நடிகை சரோஜா தேவி. இவரது இயற்பெயர் ராதாதேவி.

3. தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் “அபிநய சரஸ்வதி”, “கன்னடத்துப் பைங்கிளி” என்று அனைவராலும் அன்போடும், மரியாதையோடும் அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்.

4. 1950 மற்றும் 60களில் முதன்மைக் கதாநாயகியாக வலம் வந்தவர். 1955ம் ஆண்டு நடிகரும், தயாரிப்பாளருமான ஹொன்னப்ப பாகவதரின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவான “மகாகவி காளிதாசா” என்ற கன்னட திரைப்படத்தின் வாயிலாக வெள்ளித்திரையின் வெளிச்சம் கிடைக்கப் பெற்றார்.

5. முதல் படத்தில் கதாநாயகியாக நடித்தது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து தமிழில் “தங்கமலை ரகசியம்”, “திருமணம்” ஆகிய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்திருந்தாலும், 1958ம் ஆண்டு எம்.ஜி.ஆர் தயாரித்து, இயக்கி, இரட்டை வேடங்களில் நடித்து மிகப் பெரிய வெற்றியை ஈட்டிய “நாடோடி மன்னன்” திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக இவர் நடித்த கதாபாத்திரமே இவர் தமிழில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க காரணமாக இருந்தது.

6. இதன் தொடர்ச்சியாக இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த “கல்யாணப் பரிசு”, இயக்குநர் ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த “பாகப்பிரிவினை” ஆகிய திரைப்படங்கள் இவருக்கு தமிழில் ஒரு நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது.

7. 1957ம் ஆண்டு என்.டி.ராமாராவ் நடிப்பில் வெளிவந்த “பாண்டுரங்க மகாத்மியம்” என்ற படம்தான் இவர் தெலுங்கில் அறிமுகமாக வழிவகுத்தது. 1960களில் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் பணிபுரியும் அளவிற்கு பிஸியான நடிகையாக வலம் வந்தார் நடிகை பி சரோஜாதேவி.

8. தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், தெலுங்கில் என்.டி.ராமாராவ், ஏ.நாகேஸ்வரராவ், கன்னடத்தில் ராஜ்குமார் என அன்றைய முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான வெற்றிப் படங்களைத் தந்தார் நடிகை சரோஜாதேவி. “நாடோடி மன்னன்” தொடங்கி “அரசகட்டளை” வரை எம்.ஜி.ஆருடன் மட்டும் 26 படங்களில் ஜோடியாக நடித்த பெருமை இவருக்குண்டு.

9. 1959ம் ஆண்டு “பைகாம்” என்ற திரைப்படத்தின் வாயிலாக ஹிந்தியிலும் தடம் பதித்தார். “சஸ{ரால்”, “ஒபேரா ஹவுஸ்”, “பியார் கியா தோ டர்னா கியா”, “பேட்டி பேட்டே” ஆகியவை ஹிந்தியில் இவர் நடித்து வெளிவந்த திரைப்படங்களாகும்.

10. திரைப்படங்களில் இவரது உடையலங்காரம், சிகையலங்காரம் மற்றும் இவர் அணிந்து வரும் ஆபரணங்கள் என ஒவ்வொன்றும் அன்றைய பெண்களை வெகுவாக ஈர்த்திருந்தன. 1967ல் ஸ்ரீஹர்ஷா என்பவரை மணம் புரிந்தார். திருமணத்திற்குப் பின் எம்.ஜி.ஆரோடு இணைந்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிட்டவில்லை. எம்.ஜி.ஆரோடு இவர் இணைந்து நடித்த கடைசி திரைப்படம் 1967ல் வெளிவந்த “அரசகட்டளை”.

11. திருமணத்திற்குப் பின்பும் நடிப்பைத் தொடர்ந்த நடிகை சரோஜாதேவி, “என் தம்பி”, “அஞ்சல் பெட்டி 520”, “தேனும் பாலும்”, “அருணோதயம்”, “அன்பளிப்பு” ஆகிய திரைப்படங்களில் சிவாஜிகணேசனுடனும், “பணமா பாசமா”, “தாமரை நெஞ்சம்”, “மாலதி”, “கண்மலர்” போன்ற திரைப்படங்களில் ஜெமினிகணேசனுடனும் நடித்ததோடு, அன்றைய இளம் நாயகர்களான ரவிசந்திரனோடு “ஓடும் நதி” என்ற திரைப்படத்திலும், முத்துராமனுடன் “பத்து மாத பந்தம்” என்ற படத்திலும் நடித்திருந்தார் நடிகை சரோஜாதேவி. தமிழில் இவர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்த கடைசி திரைப்படமும் இதுவே.

12. கால் நூற்றாண்டுக்கும் மேல் தமிழ் திரையுலகில் முதன்மை நாயகியாக கோலோச்சியிருந்த நடிகை சரோஜாதேவி, அடுத்த தலைமுறை நாயகர்களான விஜயகாந்த், அர்ஜுன் ஆகியோருடனும், அதற்கும் அடுத்த தலைமுறை நாயகர்களான விஜய், சூர்யா ஆகியோருடனும் இணைந்து பணிபுரிந்திருக்கின்றார்.

13. தனது நீண்ட நெடிய கலைப் பயணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஏறக்குறைய 200க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கின்றார்.

14. பத்மஸ்ரீ, பத்மபூஷண் உட்பட தமிழ்நாடு அரசு சினிமா விருது, கலைமாமணி விருது, எம்.ஜி.ஆர் விருது, என்.டி.ஆர் தேசிய விருது, கர்நாடகா அரசு ராஜ்யோத்சவா விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, கவுரவ டாக்டர் பட்டங்கள் என ஏராளமான விருதுகளும், பட்டங்களும் கிடைக்கப் பெற்று தென்னிந்திய திரையுலகின் ராணியாக வலம் வந்த நம் 'கன்னடத்து பைங்கிளி' நடிகை பி சரோஜாதேவி அவர்களின் பிறந்த தினமான இன்று அவருடைய கலைப்பணி இன்னும் தொடர வாழ்த்தி, அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பினை பகிர்ந்து கொள்வதில் நாம் பெருமை கொள்வோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.