புதுடில்லி நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களை அளித்ததுடன், இல்லாத அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி குஜராத் அரசு துஷ்பிரயோகம் செய்துள்ளதாக உச்ச நீதிமன்றம் கடுமையுடன் குறிப்பிட்டுள்ளது. பில்கிஸ் பானு வழக்கில், 11 பேரை முன்னதாக விடுதலை செய்ததை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
:குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. கடந்த 2002ல் இங்கு இனக் கலவரம் நடந்தது. அப்போது, 21 வயதான, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
அவரது, 3 வயது குழந்தை உட்பட, அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர், வன்முறையாளர்களால் கொல்லப்பட்டனர்.
தீர்ப்பு
இந்த வழக்கில் தண்டனை பெற்ற, 11 பேரை முன்னதாகவே விடுதலை செய்து, குஜராத் அரசு உத்தரவிட்டது. இதன்படி, 2022 ஆக., 15ல் இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து பில்கிஸ் பானு உட்பட பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்தாண்டு அக்., 12ல், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.
இந்த வழக்கில் நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, உஜ்ஜல் புயான் அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
குஜராத் அரசு தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததன் அடிப்படையில், முன்னதாகவே விடுதலை செய்யும் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
உரிய அதிகாரம் இல்லாத நிலையில், கைதிகளை முன்னதாகவே விடுவிக்கும் உத்தரவை குஜராத் பிறப்பித்துள்ளதால், அது ரத்து செய்யப்படுகிறது.
இந்த விஷயத்தில் நீதிமன்றத்தையும் ஏமாற்றியுள்ளனர். இந்த வழக்கில் தண்டனை பெற்ற ஒருவர், முன்னதாகவே விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அமர்வு, 2022, மே, 13ல் பிறப்பித்த உத்தரவில், மனுவை பரிசீலிக்கும்படி குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால், முன்னதாகவே விடுதலை செய்யும் உத்தரவை பிறப்பிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. எந்த மாநிலத்தில் வழக்கு விசாரிக்கப்படுகிறதோ, அந்த மாநிலம் தான், முன்னதாகவே விடுதலை செய்யும் உத்தரவை பிறப்பிக்க முடியும்.
அதன்படி, இந்த வழக்கு மஹாராஷ்டிராவில் விசாரிக்கப்பட்ட நிலையில், முன்னதாகவே விடுதலை செய்யும் உத்தரவை பிறப்பிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த விஷயத்தில் உண்மை மறைக்கப்பட்டு, உரிய தகவல்களை உச்ச நீதிமன்றத்துக்கு தெரிவிக்கவில்லை. அதனால், 2022 மே 13ல் பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது.
தண்டனை
இந்த ஒரு மனுவை அடிப்படையாக வைத்து, மற்றவர்களும், முன்னதாக விடுதலை செய்யக் கோரி, குஜராத் அரசுக்கு கடிதம் எழுதினர். அவற்றை பரிசீலித்து, முன்னதாகவே விடுதலை செய்து, குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.
மற்றொரு முக்கியமான விஷயம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை முன்னதாகவே விடுதலை செய்யலாமா என்பது தான்.
இந்த அடிப்படையிலும், குஜராத் அரசின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில், அந்தப் பெண் எந்த ஜாதியை, மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், எந்த பொருளாதார நிலையில் இருந்தாலும், உரிய நீதி வழங்கப்பட வேண்டும்.
வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை முன்னதாகவே விடுதலை செய்வதற்கு சில காரணங்கள் இருக்க வேண்டும்.
அவர்கள் மனந்திருந்தி, நம் நாட்டுக்கு பயனுள்ளவராக இருப்பர் என கருதினால், வாய்ப்பிருந்தால் மட்டுமே விடுதலை செய்ய வேண்டும்.
குற்ற வழக்குகளில் தண்டனை என்பது, ஒருவரை தண்டிப்பது அல்ல. அதுபோன்ற குற்றங்களை தடுப்பது தான் நோக்கமாகும். டாக்டர் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது, வலியை ஏற்படுத்த வேண்டும் என்பது நோக்கமல்ல.
அந்த நோயாளி குணமாக வேண்டும் என்பதுதான் நோக்கம். அதுபோலவே, குற்றவாளிகளை முன்னதாகவே விடுதலை செய்வதிலும் கடைப்பிடிக்க வேண்டும்.
இந்த வழக்கில், அப்பட்டமாக பல மீறல்கள் நடந்துள்ளன. அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
அதனால், 11 பேரை முன்னதாகவே விடுவிக்கும் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இரண்டு வாரங்களுக்குள் அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
‘முகத்திரை நீக்கப்பட்டது’
இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா, சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:இந்த உத்தரவின் வாயிலாக, பா.ஜ.,வின் முகத்திரை நீக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான அதன் கொள்கைகள் வெளிப்பட்டுள்ளன.நம் நீதித் துறை மீதான மக்களின் நம்பிக்கை வலுப்படும். மிகவும் தைரியத்துடன் தொடர்ந்து போரிட்ட பில்கிஸ் பானுவுக்கு வாழ்த்துகள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்