Maldives President meets Chinese President as wave of protests mounts in India | இந்தியாவில் அதிகரிக்கும் எதிர்ப்பு அலை: சீன அதிபருடன் மாலத்தீவு அதிபர் சந்திப்பு

பீஜிங்: மாலத்தீவுகள் நிர்வாகத்துக்கு எதிராக, நம் நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் முஹமது முய்சு, சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை நேற்று சந்தித்து பேசினார்.

தெற்காசிய நாடான மாலத்தீவுகளில் கடந்த ஆண்டு செப்டம்பரில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில், நம் அண்டை நாடான சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாடு உடைய முஹமது முய்சு, புதிய அதிபராக தேர்வானார்.

சமீபத்தில் மாலத்தீவுகளைச் சேர்ந்தசில அமைச்சர்கள், நம் பிரதமர் நரேந்திர மோடி குறித்தும், நம் நாட்டின் சுற்றுலா வாய்ப்புகள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டனர். இது,பெரும் கொந்தளிப்பைநம்நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து,அந்த அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்தியாவை நாங்கள் மதிக்கிறோம். அமைச்சர்களின் கருத்து அரசின் நிலைப்பாடு அல்ல என, மாலத்தீவுகள் அரசு சமாதானப்படுத்த முயன்றது.ஆனாலும், மாலத்தீவுகளை புறக்கணிப்போம் என்றமுழக்கம்நம் நாட்டில் வலுப்பெற்று வருகிறது.

இதற்கிடையே,கடந்த 8ம் தேதி ஐந்து நாட்கள் பயணமாக சீனா சென்றுள்ள மாலத்தீவுகள் அதிபர் முகமது முய்சு,பீஜிங்கில் நடந்த மாலத்தீவுகள் தொழில் வளர்ச்சி கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர்,சீனர்கள் அதிக எண்ணிக்கையில் மாலத்தீவு சுற்றுலா வர கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், நேற்று அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்து பேசினார். எனினும், அவர்கள் பகிர்ந்து கொண்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை. அப்போது, இரு தரப்பு உறவுகளையும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

இது தவிர, சீனா – மாலத்தீவுகள் இடையே 20 முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இச்சந்திப்பின்போது, சீன அதிபர் ஜின்பிங் கூறுகையில், ”மாலத்தீவுடன் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தவும், புதிய நிலைக்கு அழைத்து செல்லும் நோக்கில் திட்டங்களை உருவாக்க சீனா தயாராக உள்ளது,” என்றார்.

முன்னதாக, சீன அரசு சார்பில் மாலத்தீவுகள் அதிபர் முஹமது முய்சுவுக்கு, சிவப்பு கம்பள வரவேற்பும், 21 குண்டுகள் முழங்க அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.