பெங்களூரு: குடியரசு தினத்தை ஒட்டி 11 நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சி, பெங்களூரு லால்பாக்கில் நாளை துவங்குகிறது. முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார்.
ஆண்டுதோறும் குடியரசு, சுதந்திர தினத்தை ஒட்டி, கர்நாடகா தோட்டக்கலைத் துறை சார்பில், பெங்களூரு லால்பாக்கில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
அதுபோல வரும் 26ம் தேதி குடியரசு தினத்தை ஒட்டி, லால்பாக்கில் 215வது ஆண்டு மலர் கண்காட்சி நடக்கவுள்ளது. இதற்கான நிகழ்ச்சி நிரல் லால்பாக்கில் உள்ள, தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
தோட்டக்கலைத் துறை செயலர் சல்மா இக்பால், இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் ஜெகதீஷ், துணை இயக்குனர் குசுமா ஆகியோர், நிகழ்ச்சி நிரலை வெளியிட்டனர்.
நாளை மாலை 6:00 மணிக்கு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், தோட்டக்கலை துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் ஆகியோர், கண்காட்சியை துவக்கி வைக்கின்றனர்.
அனுபவ மண்டபம்
போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி, எழுத்தாளர் சன்னபசப்பா, பெங்களூரு தெற்கு பா.ஜ., – எம்.பி., தேஜஸ்வி சூர்யா, சிக்பேட் பா.ஜ., – எம்.எல்.ஏ., உதய் கருடாச்சார், எம்.எல்.சி.,க்கள் தேவகவுடா, ஷரவணா, கர்நாடகா அரசின் தலைமை செயலர் ரஜ்னீஷ் கோயல், தோட்டகலைத் துறை செயலர் சல்மா இக்பால் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
இந்த கண்காட்சியில் இம்முறை முக்கிய ஈர்ப்பாக, பீதர் மாவட்டம் பசவகல்யாணில் உள்ள, அனுபவ மண்டபம் மாதிரி மலர்களால் வடிவமைக்கப்படுகிறது.
மலர்க் கண்காட்சி நுழைவு வாயில் பகுதியில், பசவண்ணரின் சிலை, கூடலசங்கமாவில் உள்ள பசவண்ணரின் ஐக்கிய மண்டபம், பசவண்ணரின் தாய் மதலாம்பிகையின் சொந்த ஊரான இங்கலேஸ்வர் ஆகியவை மலர்களால் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
மாணவர்களுக்கு இலவசம்
மலர் கண்காட்சியில் பிலேனோப்சிஸ், டென்ரோபியா, வண்டா, மோகரா, கேட்னிலியா, அன்சிடியும்ஸ் உட்பட பல்வேறு வகையான, மலர்கள் இடம்பெற உள்ளன. கண்காட்சிக்காக 1.50 லட்சம் மலர்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வரும் 20ம் தேதி மலர்கள் தொடர்பான, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு வரும் 27ம் தேதி பரிசுகள் வழங்கப்படுகின்றன.
தினமும் காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை, கண்காட்சி நடக்க உள்ளது. வரும் 19, 22, 23, 24, 25ம் தேதிகளில் பெரியவர்களுக்கு 80 ரூபாயும், வரும் 20, 21, 26, 27, 28ம் தேதிகளில் 100 ரூபாய் கட்டணம். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 30 ரூபாய் கட்டணம். 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனுமதி இலவசம். ஆனால், அவர்கள் கட்டாயம் பள்ளி சீருடை அணிந்து வர வேண்டும். இந்த கண்காட்சியை காண 10 லட்சம் பேர் வருவர் என்று, தோட்டக்கலை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
நகை அணிவதை தவிருங்கள்…
மலர் கண்காட்சியை ஒட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, தோட்டக்கலைத் துறை வெளியிட்ட வழிகாட்டுதல்கள்:
l லால்பாக்கில் பொது வாகனங்களுக்கு அனுமதி இல்லை. பள்ளி பஸ்கள், மாற்றுத்திறனாளிகள் வரும் வாகனங்களுக்கு மட்டுமே, லால்பாக்கில் நுழைய அனுமதி
l லால்பாக்கின் நான்கு நுழைவாயில் பகுதியிலும், பார்வையாளர்கள் பைகளை வைக்கும் அறைகள் உள்ளன. ஆனால் அந்த பைக்குள் என்ன உள்ளது என்று கூற வேண்டும்
l கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், தங்க நகைகள் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும்
l மொபைல், கேமராக்கள் எடுத்து செல்ல அனுமதி உண்டு
l தோட்டக்கலை துறையின் ஹாப்காம்ஸ் கடைகளில், உணவு பொருட்கள் கிடைக்கும்
l காலை 7:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை நான்கு நுழைவு வாயிலும், டிக்கெட் விற்பனை நடக்கும்
l பார்வையாளர் நடவடிக்கைகளை கண்காணிக்க, லால்பாக் வளாகத்தை சுற்றி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது
l குடிநீர் வசதி, 12 கழிப்பறைகள் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது
l லால்பாக் வளாகத்திற்குள் தின்பண்டங்கள் சாப்பிட அனுமதி இல்லை
l மலர்களை கைகளால் தொட்டு பார்க்க, பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
l சிறுவர்கள், குழந்தைகள் லால்பாக்கில் விளையாட அனுமதி இல்லை.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்