டௌன் சிண்ட்ரோம் கொண்டவரை, முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேந்தெடுத்துள்ளது ஸ்பெயின்.
45 வயதான மார் கால்செரன் ஸ்பெயினின் பழமைவாத மக்கள் கட்சியில் சேர்ந்து, 18 வயதில் இருந்து அரசியலில் ஈடுபாட்டோடு செயல்பட்டு வந்துள்ளார். அறிவுசார் குறைபாடு உடையவர்களை பொது உரையாடலில் சேர்க்க வேண்டும் என்று, தசாப்தங்களாகக் குரல்கொடுத்து வந்தார்.

பல ஆண்டு அரசியல் பயணம், கட்சி தரவரிசையில் (Party Rank) அவரது மதிப்பை உயர்த்தியது. கடந்த மே மாதம் வலென்சியாவின் பிராந்திய தேர்தல்களுக்கான பட்டியலில் 20-வது வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டவுன் சிண்ட்ரோம் பாதிப்புள்ள சில பேரே இதுவரை அரசியலில் நுழைந்துள்ளனர். அந்த வகையில், 2020-ல் ஃபிரான்ஸின் நகர சபை உறுப்பினராக எலியோனோர் லாலூக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022-ல் அயர்லாந்து நாட்டில் ஃபிண்டன் ப்ரே வரலாறு படைத்தார். தற்போது அந்தப் பட்டியலில் மார் கால்செரன் சேர்ந்துள்ளார்.

மார் கால்செரனின் நியமனம், அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கியதற்கான உண்மையான எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து கால்செரன் கூறுகையில், `என்னை ஒரு தனி நபராகப் பாருங்கள்; எனது இயலாமைக்காக அல்ல. டௌன் சிண்ட்ரோம் உள்ளவர்கள் பங்களிக்க நிறைய இருப்பதை சமூகம் பார்க்கத் தொடங்கி உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
வாழ்த்துகள் மார் கால்செரன்!