அயோத்தி,
அயோத்தி ராமர் கோவிலில் வரும் 22ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ள 4 அடி உயர ராமர் விக்ரகத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் நேற்று வெளியானது.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் 22ம் தேதி நடக்கவுள்ளது.
அன்றைய தினம் மதியம் 12:20 மணிக்கு, ராமர் சிலை கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
கடந்த 16ம் தேதி, கும்பாபிஷேகத்திற்கான சடங்குகள் துவங்கின. கோவிலை சுற்றி பெண்கள் புனித கலசம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.
கடந்த 17ம் தேதி இரவு குழந்தை ராமரின் விக்ரகம் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எடுத்து வரப்பட்டு, ‘கிரேன்’ உதவியுடன் கோவில் கருவறைக்குள் வைக்கப்பட்டது.
இந்நிலையில், சிற்பி அருண் யோகிராஜின் சிற்பக் கூடத்தில் எடுக்கப்பட்ட ராமர் விக்ரகத்தின் புகைப்படம் நேற்று சமூக வலைதளத்தில் வெளியானது.
இது தொடர்பாக மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ேஷாபா கரண்டல்ஜே முதல் நபராக இந்த படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
அதில் விக்ரகத்தின் கண்கள் மஞ்சள் நிற துணியால் கட்டப்பட்ட நிலையில் உள்ளது. கருப்பு நிறக் கல்லில் வடிக்கப்பட்ட இந்த ராமர் விக்ரகம், நான்கு அடி உயரமும், 200 கிலோ எடையும் உடையது.
வரும் 22ம் தேதி ராமர் விக்ரகம் பிரதிஷ்டையின் போது, விக்ரகத்தின் கண்களில் உள்ள துணி விலக்கப்பட உள்ளதாக கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, ராமர் விக்ரகத்தின் புகைப்படத்தை பா.ஜ., செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று வெளியிட்டார். அதில், கண்கள் கட்டப்படாத நிலையில், நின்ற வடிவில் உள்ள, 5 வயதான ராமர், கையில் தங்க வில் – அம்புடன் காட்சி தரும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்