தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சில்வர் ஜூப்ளி ஹிட்ஸ் கொடுத்தவர் மோகன். ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘உதயகீதம்’, ‘தென்றலே என்னைத் தொடு’ எனப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். அந்தப் படத்தின் பாடல்கள் இன்னமும் பலரின் ஃபேவரைட்டாக உள்ளன. கடந்த 2008-ல் ‘சுட்டபழம்’ படத்தில் நடித்த மோகன், அதன்பின் பல வருடங்களாக நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு ‘தாதா’ படத்தின் இயக்குநர் விஜய் ஶ்ரீ சொன்ன கதை அவருக்குப் பிடித்துப்போக, ‘ஹரா’வில் கமிட் ஆனார்.
சமீபத்தில் வெளியான படத்தின் தீம் மியூசிக் வீடியோ மில்லியனைத் தொட்டதில் மகிழ்ச்சியில் இருக்கிறது படக்குழு. இந்நிலையில் படத்தின் நிலவரம் குறித்து இயக்குநர் விஜய் ஶ்ரீயிடம் பேசினேன்.

“மோகன் சாரை வைத்துப் படம் பண்ணணும் என்பது ரொம்ப வருஷமா ஆசைப்பட்ட விஷயம். தமிழ்ல ஸ்டார்ஸ் நிறைய பேர் இருக்காங்க. ஆனா, சில்வர் ஜூப்ளி ஸ்டார்னு ஒருசிலரைத்தான் சொல்ல முடியும். அப்படி ஒருத்தர் மோகன் சார். இதுல ஆச்சரியமான விஷயம், கடந்த ரெண்டு வருஷமாவே மோகன் சாரும் கதைகள் கேட்டுட்டுதான் இருந்தார். நல்ல கதை அமையும் போது பண்ணலாம்னு இருந்தார். நான் அவர்கிட்ட என்னுடைய ‘ஹரா’ கதையைச் சொன்ன போது, ‘நானும் இப்படி ஒரு கதையைத்தான் எதிர்பார்த்தேன்’னு சொன்னார்.
ஒரு சராசரி மனிதன் சந்திக்கும் பிரச்னைகள்தான் படத்தின் கதை. ஒரு சாதாரண பொதுஜனமாக நடித்திருக்கிறார் மோகன். கமர்ஷியல் டிராமாவோடு சஸ்பென்ஸும் அள்ளும் படமாகக் கொண்டு வந்திருக்கேன். ஊட்டி, கோத்தகிரி, கோவைன்னு படப்பிடிப்பு நடத்தியிருக்கோம். மோகன் சாரின் ஜோடியாக ‘அயலி’ அனுமோல் நடிக்கிறாங்க. கௌசிக், அனித்ரா நாயர்னு படத்துல இன்னொரு ஜோடியும் உண்டு. தவிர யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், பழ.கருப்பையா, வனிதா விஜயகுமார்னு கதைக்கான ஆட்கள் பலர் இருக்காங்க.

110 நாள்கள்ல மொத்த படப்பிடிப்பையும் முடிச்சிட்டோம். டப்பிங் வேலைகளும், பின்னணி இசைக்கான வேலைகளும் போயிட்டிருக்கு. இந்தப் படம் ஒருசில மாதத்திற்கு முன்னரே படப்பிடிப்பை முடிச்சிருக்க வேண்டியது. இடையே நான் விபத்தில் சிக்கியதால், படப்பிடிப்புக்குக் கிளம்பாமல் இருந்தேன். மோகன் சாரும் எனக்காகக் காத்திருந்தார். இதில் அவர் ஆக்ஷனில் அசத்தியிருக்கார். படத்தின் ரிலீஸ் தேதியைக் குறிக்கும் வேலைகளில் இறங்கிவிட்டோம்” என்கிறார் இயக்குநர் விஜய் ஶ்ரீ.
இந்தப் படத்தின் இடையேதான் விஜய்யின் `தி கிரேஸ்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் கமிட் ஆனார் மோகன். இப்போது அதன் படப்பிடிப்பிலும் பிஸியாக இருக்கிறார்.