The court imposed a fine of Rs 1 lakh on the plea seeking ban on Rahuls post | ராகுலின் பதவிக்கு தடை கோரிய மனு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த கோர்ட்

புதுடில்லி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு, லோக்சபா எம்.பி., பதவி மீண்டும் வழங்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மனுதாரருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, மோடி சமூகத்தினர் குறித்து அவதுாறாக பேசியதாக, காங்., – எம்.பி., ராகுல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தகுதி நீக்கம்

இந்த வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த குஜராத்தின் சூரத் நீதிமன்றம், ராகுலுக்கு இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, இரு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், எம்.எல்.ஏ., – எம்.பி.,க்கள் தங்களது பதவியை இழப்பர். அந்த வகையில், எம்.பி., பதவியில் இருந்து ராகுலை தகுதி நீக்கம் செய்து லோக்சபா செயலகம் உத்தரவிட்டது.

சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு ஆக., 4ம் தேதி, ராகுலுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

தொடர்ந்து, ஆக., 7ம் தேதி, ராகுலுக்கு மீண்டும் எம்.பி., பதவி வழங்கப்பட்டுள்ளதாக லோக்சபா செயலகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதை ரத்து செய்யக் கோரி, உ.பி.,யின் லக்னோவைச் சேர்ந்த அசோக் பாண்டே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நேரம் வீணடிப்பு

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘இது போன்ற அற்பமான மனுக்களை தாக்கல் செய்வது, நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்கிறது.

‘இந்த மனு நிராகரிக்கப்படுகிறது. மேலும், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது’ என தெரிவித்தது.

இந்த விவகாரத்தில், கடந்த ஆண்டில், அசோக் பாண்டே தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அபராதமும் விதித்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.